spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜகவுக்கு விலைபோன சீமான்... ஆளுர் ஷாநவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாஜகவுக்கு விலைபோன சீமான்… ஆளுர் ஷாநவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

-

- Advertisement -

பெரியார் குறித்த அவதூறுகளை பரப்புவதன் மூலம் இஸ்லாமியர்கள், தலித்துக்களை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரிக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணிகளை தாங்களே செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்பதற்காக சீமானை கையில் எடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இஸ்லாமியர்கள் குறித்து பெரியார் அவதூறாக பேசியதாக சீமான் வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்து, தனியார் யூடியூப் சேனலுக்கு ஆளுர் ஷாநவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தந்தை பெரியாரை எப்படி ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் சனாதன சக்திகள் குறிவைத்து தாக்குகிறார்களோ, இழிவு செய்கிறார்களோ அதே இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்து நிற்கிறது. சீமான் எங்களோடு பயணித்தவர்தான். பெரியாரிய கருத்துக்களை தாங்கி வெளிப்பட்டவர்தான் அவர். பெரியாரிய மேடைகள் மூலம் பொதுவாழ்வில் அறிமுகமானவர், இன்று மிக மோசமான எதிர் நிலைப்பாட்டினை எடுத்துள்ளார். பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரை கேள்வி எழுப்புவது குறித்து இங்கு யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் சீமான் வைப்பது விமர்சனம் அல்ல வன்மம், வெறுப்பு மனநிலையின் வெளிப்பாடு. அவதூறாகவும் இருக்கிறது. அதற்கு சான்று இப்போது அவர் பெரியார் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. இதுவரை அதற்கான ஆதாரத்தை சீமான் வழங்க வில்லை. சீமான் அதற்கு நேரடியாக பதில் அளித்துள்ளாரா? என்றால் இல்லை. ஆதாரம் இல்லாமல் எப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார். கேட்டால் பெரியாரின் நூல்களை அரசுடமையாக்க வேண்டும் என கூறுகிறார்.

பெரியார் குறித்த அனைத்து நூல்களும் வெளியில் கிடைக்கின்றன. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் தான் சீமான் அதனை வழங்கவில்லை. அந்த பேட்டியை சீமான் கொடுப்பதற்கு முன்பாக அவர் பத்திரிகையாளர் மணிக்கு அளித்துள்ள பேட்டியில் பெரியார் தங்களது இயக்கத்தின் வழிகாட்டி என்று தெரிவித்தார். அதில் அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்புமை படுத்தி பேசியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் பெரியார் மீது அவதூறு பரப்புகிறார். தமிழ் மொழி குறித்து பெரியார் விமர்சனம் இன்றுதான் உங்களுக்கு தெரிகிறதா? சீமான் பெரியாரை போற்றும் போதும் சரி, தற்போது தூற்றும் போதும் சரி பெரியாரின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சீமான் 2009ஐ கால அளவாக வைத்து மன மாற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கிய பின்னர் தற்போது மணி பேட்டி வரையிலான கால கட்டத்தில் பெரியார் புதிதாக தோன்றி வந்து தமிழை விமர்சித்தாரா?.

திமுக தந்தை பெரியாரை முன்னிறுத்துவது ஏன் என்று கேள்வி சீமான் எழுப்புகிறார். காங்கிரஸ் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள். நாங்கள் அம்பேத்கரிய கொள்கையை ஏற்றுக்கொண்டவர் முதலமைச்சராக வேண்டும் என்று கூறுகிறோம். அதுபோல திமுக பெரியாரை முன்னிலைப்படுகிறது. சீமான் ஏன் பெரியாரை முன்னிலைப்படுத்தவில்லை என நாங்கள் கேள்வி எழுப்ப முடியுமா?. ஒரு அரசியல் இயக்கம் என்பது ஒரு தலைவரின் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது என்றால் அவர்களது கொள்கைகளை வெளிப்படுத்ததான் செய்வார்கள். இதை கேள்வி எழுப்புவது தவறு. உங்களிடம் வந்து ஏன் பெரியாரை முன்னிலைப்படுத்தவில்லை என்று யாரும் கேட்டார்களா?.

தந்தை பெரியார்

தமிழை, இஸ்லாமியர்கள் குறித்து பெரியார் தவறாக பேசிவிட்டார் என சீமான் தெரிவித்துள்ளார். இதற்காக எந்த அம்பேத்கரிய இயக்கங்களோ, தமிழ் அறிஞர்களோ, இடதுசாரிகளோ பெரியாரிடம் சண்டைக்கு செல்கிறார்களா? என்றால் இல்லை. மணவை முஸ்தபா என்பவர் ஒரு அறிவியல் தமிழ் அறிஞர்.லட்சக்கணக்கான கலைச் சொற்களை கண்டெடுத்து ஆவணமாக்கி தந்த அவரின் வீட்டிற்கு நான் சென்றபோது, அங்கு பெரியார் படம் இருந்து. இது அவரிடம் குறித்து கேட்டபோது, தமிழ்மொழியில் மருத்துவம் படிக்க முடியவில்லையே, தொழில்நுட்பம் படிக்க முடிய வில்லையே என்று வருத்தப்பட்டவர் பெரியார் தான். இதை வைத்துக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டு திரிகிறார்களே விமர்சனம் செய்தவர் அவர்தான். செம்மொழி, மூவாயிரம் ஆண்டுகள் மூத்த மொழி என்று தமிழை சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் பெரியார் தமிழை விமர்சிக்கிறார் என்று ஆய்வு செய்தபோது தான் அவரது விமர்சனம் எனக்கு நியாயம் எனப்பட்டது. அதனுடைய தாக்கத்தால் தான் அறிவியல் கலை சொற்கள் உருவாக்கும் பணிக்கு என்னை அற்பணித்தேன் என்கிறார். பெரியாரின் விமர்சனம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று பாருங்கள்.

சங்கராச்சாரியார் சொன்னார் பாருங்கள் நீஷ பாஷை என்று அதுதான் தமிழை இழிவுபடுத்துவது. பெரியார் தமிழை இழிவுபடுத்திவிட்டு, ஆங்கிலத்தைதான் உயர்த்தி பிடித்தார். தமிழர்கள் மீது கொண்ட பரிவு காரணமாக அவர் இதனை சொன்னார். அந்த காலத்தில் எளிய மக்கள் உயர்க்கல்வி பெறுவதற்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால், அதனை பெரியார் வலியுறுத்தியுள்ளார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய மொழி தமிழ் என்று கூறுகிறார்கள். அப்படி எனில் எதற்காக தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. காரணம் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தில் இருந்து மொழியை காக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது. அதற்கு உரிய நியாயம் தானே ஒரு சமுதாயத்திற்கு, ஒரு மாநிலத்திற்கு தேவைப்பட்டிருக்கும். அந்த சேவையை ஆற்றியர் பெரியார் தானே. மறைமலை அடிகள் அவரது நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியவர். ஒவ்வாரு இயக்கத்திற்கு ஒரு தேவை ஏற்பட்டது.

பெரியார் முரண்பாடுகளின் மொத்த உருவம் ஆவார். அவர் காங்கிரசை எதிர்த்தார். பின்னர் காங்கிரசை ஆதரித்தார் என்பார்கள். இது இரண்டுக்கும்  காரணம் உள்ளது. திமுக ராஜாஜி உடன் சேர்ந்து தேர்தல் களத்திற்கு வருகின்றனர். ராஜாஜியின் உற்ற நண்பர் பெரியார். தனிமனித நட்பிலோ, உறவிலோ கண்ணியத்தை கடைபிடித்தவர் பெரியார். ஆனால் அதன் எல்லை அவருக்கு தெரியும். ராஜாஜியுன் உடன்பட்டார். ஆனால் அவரது கருத்தில் பெரியாயர் உடன்படவில்லை. அவருக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும், அரசியல் உறவு வைத்தாலும் எந்த எல்லைக்கும் சென்றும் அவர்களை அடித்தார். அந்த அடிப்படையில், முஸ்லீம்கள் குறித்த அவரது கருத்து அமைந்துள்ளது. ஏனென்றால் முஸ்லீம் லீக் ராஜாஜியோடு தேர்தல் கூட்டணி வைத்தனர். திமுக – ராஜாஜி கூட்டணி சேர்ந்ததால் திமுகவை விமர்சித்தார். பெரியார் அந்த இடத்தில் காமராஜரை ஆதரப்பது என்று நிலைப்பாடு எடுத்தார். முஸ்லீம்கள் குறித்த பெரியாரின் அனைத்துக் கருத்துக்களையும் விசிக ஏற்கிறதா? என்பது முக்கியம் அல்ல. ஒரு தலைவரை விமர்சிக்கும் முன்பாக நம்மிடம் குறைந்தபட்சம் நியாயம் இருக்க வேண்டும். பெரியாரால் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பிடித்தவற்றை ஏற்கிறார். ஒவ்வாதவற்றை கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், தமிழ் இலக்கியத்தை, சிலப்பதிகாரத்தையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுதான் ஒரு அறிஞர், சமுக சீர்திருத்தவாதி செய்ய வேணடிய வேலையாகும்.

தந்தை பெரியார் 95 வயது வரை வாழ்ந்தவர். 75 வருட பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர். பல்வேறு காலகட்டத்தில் அவர் பல்வேறு நிலைப்பாடுகளை எடுப்பார். அதை அந்த காலச்சூழலோடு பொருத்தி தான் அந்த நிலைப்பாட்டை பார்க்க வேண்டும். வரலாற்றில் ஒரு பகுதியை மட்டும் துண்டாக வெட்டிப்பார்த்தால் என்ன ஆகும். அது மாதிரி சீமானுக்கும் எடுக்கலாம் அல்லவா?. 24 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிப் பேசியவர் அவர். அவர் நாளையே பெரியாரை ஆதரித்து நிலைப்பாடு எடுக்கலாம். இன்று சீமான் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க காரணம் ரஜினியை சந்தித்துவிட்டு வந்தார். துக்ளக் மேடையில் பெரியாரை குறித்து அவதூறை அள்ளி வீசினார். அதே டோனில் இன்று சீமான் பேசியுள்ளார். சீமானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யார் என்றால் சுமந்த் சி ராமன், பாண்டே, அண்ணாமலை, ராமசீனிவாசன் என்று வலதுசாரிகள் தான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனரே தவிர திராவிட இயக்கமோ, விசிகவோ, இடதுசாரிகளோ ஆதரிக்கவில்லை. பெரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை தான் அவர் எடுத்துள்ளார். அவருக்கு விசிக, இடதுசாரிகள் என கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீமான் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா. ஆனால் இங்கு சீமானும், வலதுசாரிகளும் ஒரே புள்ளியில் இணைகின்றனர். ராஜாஜி ஆதரவு நிலைப்பாட்டை காயிதே மில்லத் எடுத்தபோது, பெரியார் வருத்தத்தில் பேசியுள்ளார். சீமான் அவரது கட்சி தொண்டர்களை குறித்து எப்படி பேசுகிறார். அது அவரது மொழிநடை. அதுபோல தான் பெரியாருக்கும் ஒரு மொழிநடை உள்ளது. அவர் கொச்சை தமிழில் பேசக் கூடியவர். அவருக்கு சொல்லக்கூடிய பொருள்தான் முக்கியமே தவிர, எப்படி சொல்கிறோம் என்பது முக்கியமில்லை.

தமிழை இகழ்ந்தவரை விடமாட்டேன் என பாரதி தாசன் சொல்லியுள்ளார் என சீமான் குறிப்பிடுகிறார். ஆனால் பெரியாரை அவர் சொன்னாரா?. பெரியார் குறித்து தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதி தாசன் பாடல் பாடியுள்ளார். பெருஞ்சித்திரனார், தொ.பரசிவம் வரை எந்த தமிழறிஞரும் பெரியாரை கொண்டாடமல் இருந்ததில்லை. திரு.வி.க. மறைந்தபோது அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தவர் தந்தை பெரியார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் போன்ற பலருடன் அவர் நட்பு பாராட்டியவர். வரலாற்றில் இவற்றை எல்லாம் எடுத்துவைத்து பார்க்க வேண்டும். இஸ்லாம், கிறிஸ்துவம் குறித்து நீண்ட நெடும் பயணம் செய்தவர் பெரியார். இஸ்லாம் குறித்து அவர் விமர்சனங்களை முன் வைத்தார். அம்பேத்கர் பவுத்ததை ஏற்றபோது, இஸ்லாத்துக்கு சொல்லுங்கள் என்று பெரியார் கூறினார். 1973ல் பெரியார் மறைந்தார். அதற்கு முதல் ஆண்டில் காயிதே மில்லத் மறைந்தார். புதுக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பெரியார், தம்பி போய்விட்டீர்களே, இனி  இந்த சமுதாயத்தை யார் காப்பாற்றுவார் என்று கண்ணீர் விட்டு அழுதார் என்று நாகூர் அனிபா தெரிவித்துள்ளார். முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போக சொன்னார், பார்ப்பனர்களும் அவர்களும் ஒன்று என்று சொன்னால், அந்த மக்களுக்காகதான் அவர் கவலைப்பட்டுள்ளார். வகுப்புவாரி இடஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடியவர் பெரியார். தமிழ்நாட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பான அரசியல் சூழல் இஸ்லாமியர்களுக்கு வேறு எங்காவது இருக்கிறதா?. புறச்சூழலையையும், அவரது இயக்கத்தையும் இந்த மக்களுக்காக ஆதரவாக இருக்குமாறு கட்டமைத்து சென்றவர் பெரியார். அவரது நீண்ட பயணத்தில், இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. இஸ்லாமியர்கள் எந்த சூழலிலும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக சென்றுவிடக் கூடாது என்பதற்காக பெரியார் விமர்சித்தார்.

பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு சொந்த நோக்கம் இருக்கலாம். 24 மணி நேரத்தில் பேச்சை மாற்றி பேசுவது என்பது அதை தான் காட்டுகிறது. பெரியார் குறித்து இன்று அவதூறு செய்கிறார். பாரதிதாசனின் கருத்து என்பது, சங்கராச்சாரியாரை எதிர்த்து பாடியது. கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, கி.வீரமணி போன்ற பிராபகரனின் ஆதவாளர்களுடன் சண்டைக்கு செல்லும் சீமான், அவரை எதிர்த்த சுப்பிரமணிய சாமி போன்றவர்களை ஆதரிக்கிறார். பெரியார் இயக்கங்களை தமிழ் தேசியத்திற்கு எதிராக காட்டுகிறார். பெரியாரியத்தை பேசும் மதிவதணிக்கு அந்த பெயர் வைக்க காரணம் விடுதலைப்புலிகள் மீதான பற்றுதான். பெரியார் இயக்கம் தமிழுக்கும், தமிழ் தேசியத்துக்கும் பெரியளவில் பங்களிப்பு ஆற்றி உள்ளது. ஆனால் அதனை நேர் எதிர் திசையில் நிறுத்துவதும், இதனை எப்போதும் எதிர்த்த சக்திகளை கண்டும் காணாமல் விட்டு, அவர்களை இளைஞர்களிடம் இருந்து மறக்கடிக்க செய்வது யார் கொடுத்த அசைன்மெண்ட்?

சீமான் ஓரு கருத்தை சொன்னால், அவரை காப்பாற்ற அண்ணாமலை, பாண்டே என்ற வரிசையாக வருகின்றனர் என்றால் அதன் பின்னணி என்ன?. அம்பேத்கரும், பெரியாரும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதற்கு வரலாறே சாட்சி. அவரை போய் பெரியாருக்கு எதிராக நிறுத்துகிறார். முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் பெரியாரின் வழிவந்த கலைஞர். முஸலீம்களை, தலித்துகளை, தமிழ் அறிஞர்களை திராவிட இயக்கத்திற்கு எதிராக திருப்புவது தான் அவர்களுடைய நோக்கம். இதனை பாஜக நேரடியாக செய்தால் மக்கள் நம்ப மாட்டார்கள். அதனால் அந்த வேலையை செய்ய சீமானை கருவியாக பயன்படுத்தினார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ