திமுகவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளது, திமுகவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசியல் ரீதியாக பல்வேறு வழக்குகளை நடத்தியுள்ளார். கிறிஸ்தவர். சல்மா, ஒரு இஸ்லாமிய பெண். அவரை நிறைய விவாதங்களில் பார்த்திருக்கிறேன். அவர் எங்கும் லாபி செய்யக்கூடிய நபராக தெரியவில்லை. அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவராகவே சல்மாவுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
இஸ்லாமியர்களில் 90 சதவீதத்திற்கு மேலாகவும், கிறிஸ்தவர்கள் 80 சதவீதத்திற்கு மேலாகவும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கிறார்கள். தற்போது அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்துள்ளதால் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும். மு.க.ஸ்டாலின், வாக்களிக்கக் கூடியவர்களுக்கு அதிகார மையத்தில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறார். வாக்கு வங்கி அரசியல் ரீதியாகவும், கட்சிக்கு பாடுபட்டவர்கள் என்ற அடிப்படையிலும் வில்சன், சல்மா தேர்வு என்பது சரியானதுதான்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சிவசிலிங்கம், மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சேலத்தை சேர்ந்த செல்வகணபதி எம்.பி. ஆகவும், மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் உள்ளார். சிவலிங்கம், மாவட்ட செயலாளர். தற்போது ராஜ்யசபா எம்.பி. ஆக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் சேலம் மாவட்டத்தை கடும் போட்டி நிறைந்த பகுதியாக முதலமைச்சர் பார்க்கிறார். சேலம், தருமபுரி மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகளவு விழுந்துள்ளது. ஆனால் பாமகவுக்கு மோடி பிரதமர் என்று பிற சாதிகளின் வாக்குகள் விழுந்துள்ளது.
அன்றைக்கு திமுக 27 சதவீதத்தில் இருந்தது. இன்றைக்கு 47 சதவீதம் உள்ளது. அப்படி உள்ளபோதும் ஸ்டாலின் திருப்தி அடையவில்லை. பாஜகவின் 18 சதவீதத்தில் உள்ள சிறிய எண்ணிக்கையிலான சாதிகள், ஸ்டாலினை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. உடையார் சமுதாயத்தை சேர்ந்த சிவலிங்கம், ராஜ்யசபா கொடுப்பது என்பது, மோடி பிரதமராக வாக்களித்த சிறிய எண்ணிக்கை இந்துக்களை ஸ்டாலின் பக்கம் கொண்டு வருவதற்கான ஒரு வியூகமாகும்.
சல்மா, கனிமொழியின் ஆதரவாளர் ஆவார். அவர் திமுக நிர்வாகி என்பதை தாண்டி, இலக்கிய உலகில் பெரிய பங்களிப்பு உள்ளது. கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு மிகவும் தகுதி வாய்ந்த நபர் கமல்ஹாசன். தெளிவாக வாக்கு பலத்தை நிரூபித்த தலைவர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது பிரச்சாரத்துக்கு பெரிய பலம் இருந்தது. கோவையில் வாக்குகளுக்கு பணம் கொடுத்திருந்தால், அவர் ஜெயித்து இருக்கலாம். ஆனால் அவர் கொள்கையுடன் நின்றார். பாஜக எதிர்ப்பில் உறுதியாக உள்ளார். அவரது பங்களிப்பு, செல்வாக்கு எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு ஸ்டாலின் பரிசளித்து உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்குகளை வாங்கித் தருகிற பிரச்சாரகராக இருப்பார். கமல் வாங்கியது, அவர் மீது பற்று கொண்டவர்களுடைய வாக்குளாகும். அந்த வாக்குகளை திமுகவுக்கு கொண்டுவர முடியும். கமல்ஹாசனுக்கு 3 சதவீதம் வாக்குகள் உள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் வைகோ புறக்கணிக்கப்பட்டதாக கருதவில்லை. அடுத்த 6 மாதத்தில் கூட ராஜ்யசபா தேர்தல் வருகிறது. நானே வைகோவை கவுரவப்படுத்தி கொடுக்க வேண்டும் என்கிற எண்ண ஓட்டம் இருந்தது. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பாடுபட்ட ஒரு தலைவர் வைகோ. வைகோவுக்கு இடம் கொடுத்தால் ஸ்டாலினுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விதமாக தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அரசியல் நிர்பந்தம். ஒரு இஸ்லாமியர். ஒரு கிறிஸ்தவர். கமல்ஹசான். சேலத்தை மையமாக ஒருவர் என்று அறிவிக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் வைகோவுக்கு கொடுத்தால் மகிழ்ச்சிதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.