துணைவேந்தர்கள் நியமன வழக்கு மற்றும் ஜனநாயகன் பட வழக்கில் எதிர் மனுதாரருக்கு உரிய கால அவகாசம் வழங்கி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.


பல்கலைக் கழக துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமிக்க வகை செய்யும் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லையை சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர் வெங்காடஜலம் என்பவர் மதுரையை சேர்ந்த வழக்கறிஞரை வைத்து வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 10 பல்கலைக் கழக சட்டத்திருத்த மசோதாக்களும் யுஜிசி விதிகளுக்கு முரணானது என்றும், எனவே அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனு 2025 மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற 2வது விடுமுறை கால அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உயர்கல்வித்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

அப்போது சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்ய கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க பதில் மனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கறிஞர்களை வாதிடுமாறு கூறினார். ஆனால் அரசு வழக்கறிஞர்கள் தங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று சொன்னார்.
டெல்லியில் இருந்து காணொலி மூலம் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க தாங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் தாக்கல் செய்திருப்பதாக கூறினார். எனவே இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் நீதிபதிகள் கால அவகாசம் வழங்க மறுத்து, உத்தரவுகளை எழுதத் தொடங்கினார்கள்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய உரிய அவகாசம் கோரினோம் என்பதை தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். அவகாசம் வழங்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்வோம். அரசுத்தரப்பை பொறுத்தவரை இன்று வழக்கில் வாதிடவில்லை. கால அவகாசம் வழங்க மட்டுமே கோரினோம் என்றார். இதே கோரிக்கையை பி.வில்சன் வைத்தார். அவர் பேசுகிறபோதே மைக்கை ஆஃப் செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 10 சட்டங்களுக்கும் தடை விதித்து தீர்ப்பளித்தனர். உத்தரவில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தனர்.
இந்த உத்தரவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களுக்கு இன்று வரை துணை வேந்தர்கள் நியமிக்க முடியாமல் போனது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாயுடுவிடும், மனுத்தாக்கல் செய்யப்பட்ட 5-வது நாளில், அரசுத் தரப்புக்கு உரிய அவகாசம் வழங்காமல் தீர்ப்பு கொடுக்கலாமா? என கேள்வி எழுப்பினார். நீதிபதி ஜோய் மால்யா பக்ஷியும் அதே கேள்வியை எழுப்பினார். அப்போது உயர்கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த வழக்கை விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு எடுத்திருக்கக் கூடாது என்றும், ஏப்ரல் மாதம் நோட்டிபிகேஷன் வந்தபோதும், மனுதாரர் காத்திருந்து மே மாதம் இந்த அமர்வில் மனு போட்டனர் என்றும், மதுரை அமர்வை புறக்கணித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர் என்றும் தெரிவித்தார்.
இதுவரை கேட்டிராத, நடைபெறாத ஒரு நடைமுறையின்படி மிகவும் நியாயமற்ற முறையில் நீதிபதிகள் நடந்துகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்தனர் என்றும் பி.வில்சன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வழக்கமாக வழக்குகளில் விசாரித்து விட்டு தடை வழங்கப்படும் என்றும், ஆனால் இந்த வழக்கில் தடையை வழங்கிவிட்டு விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் அந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வோ, அல்லது வேறு நீதிபதி அமர்வோ 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அதுவரை துணை வேந்தர்களை நியமிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதை தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் கடந்த மே மாதம் நாம் முன்வைத்த விமர்சனம் அனைத்தும் உண்மை என்று நிரூபணமாகி உள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீதிமன்றம் சட்டப்பூர்வமானது என்ற பார்வையுடனே விசாரணையை தொடங்க வேண்டும். விசாரணையில் அது அரசியலமைப்புக்கு எதிராக இருந்தால் தடையோ, அல்லது அதில் இடம்பெற்ற பிரிவுகளையோ ரத்து செய்யலாம். மற்றொன்று இயற்கை நீதியை கடைபிடித்தே ஆக வேண்டும். அது தவிர்க்க முடியாத நடைமுறை என்பதை உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் உறுதி செய்துள்ளது. எதிர் மனுதாராருக்கு உரிய அவகாசம் வழங்காமல் தீர்ப்பளித்தால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படும் என்று இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விரைந்து உத்தரவுகளை வழங்கினார். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தர்கா தரப்புக்கும், வக்பு வாரியம் போன்றவற்றுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன வழக்கு, ஜனநாயகன் பட வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அதே உத்தரவுகளை தான் பிறப்பித்தன. ஆனால் இருநீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவு சரி என்று சொல்லிவிட்டனர்.
எதிர்மனுதாரருக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது இயற்கை நீதி. அதை நீதிமன்றம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமும், உயர்நீதமன்றமும் சொல்லியுள்ளது. மொத்தத்தில் துணை வேந்தர் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மற்றும் ஜனநாயகன் படத்தின் வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பு என்பது, துணைவேந்தர்கள் நியமன வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நடந்துகொண்ட முறை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் இருநீதிபதிகள் நடந்துகொண்ட முறைக்கு சேர்த்து கொட்டு வைத்துள்ளதாகவே பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


