Homeசெய்திகள்கட்டுரைத.வெ.கவுக்கு  6 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது... சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

த.வெ.கவுக்கு  6 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது… சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

-

- Advertisement -

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. விஜய்க்கு ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகளவு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விஜய்க்கு என் முழு ஆதரவு உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தனது கட்சியின் மாநில மாநாட்டிற்கு பின்னர் தனது கட்சியின் செல்வாக்கு என்ன என்பதை அறிந்துகொள்ளும் விதமாக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 4 பிரிவுகளாக பிரித்து இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களின் வயது, பாலினம், சமூக பொருளாதார நிலை மற்றும் அவர்களது புவியியல் சூழல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. மேலும், சமுதாயம், இனம், அவர்களின் கல்வி நிலை, வசிப்பிடம் கிராமமா? அல்ல நகரமா? மற்றும் அவர்கள் செய்யும் தொழில் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.

இந்த பிரம்மாண்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 6 சதவீதம் வாக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மண்டல அளவில் அதிகபட்சமாக கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் 6.0 சதவீதம் வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த மண்டலத்தில் குறிப்பிடத்தக்க விதமாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 7 சதவீதம் தவெகவுக்கு வாக்குகள் உள்ளன. குறைந்தபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 5.5 சதவீதம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலம் திகழ்கிறது. இந்த மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 5.5 சதவீதம் வாக்குகள் தான் உள்ளது. இந்த மண்டலத்தில் அதிகபட்சமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 6.5 சதவீத வாக்குகள் உள்ளன. அதேவேளையில் குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 3.5 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் த.வெ.கவுக்கு 5.9 சதவீதம் வாக்குகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் 5 சதவீதம் வாக்குகளை கொண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் 5.6 சதவீதம் வாக்காளர்கள் த.வெ.கவை ஆதரிக்கின்றனர். அதிகபட்சமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா 7 சதவீதம் வாக்காளர்கள் தவெகவை ஆதரிக்கின்றனர். இம்மண்டலத்தில் குறைந்தபட்சமாக தலைநகர் சென்னையில் 4.5 சதவிகிதம் வாக்காளர்கள் விஜய் கட்சியை ஆதரிக்கின்றனர்.

வயது அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை 22 முதல் 35 வயது உடையவர்கள் அதிகளவில் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்  2.1 சதவீதம் பேர் விஜயை ஆதரிக்கின்றனர். அடுத்தபடியாக 18 முதல் 21 வயதுடையவர்கள் 1.9 சதவீதம் பேர் தவெகவை ஆதரிக்கின்றனர். 36 முதல் 45 வயது உடையவர்களில்  1.69 சதவிகிம் பேர் த.வெ.கவை விரும்புகின்றனர் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. விஜய் கட்சிக்கு, ஆண்களை விட பெண்களே அதிக ஆதரவாளர்களாக உள்ளது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதில் பெண்கள் 3.17 சதவீதம் பேர் உள்ளனர். ஆண்கள்  2.62 சதவீதம் பேர் த.வெ.கவை ஆதரிக்கின்றனர்.

சமுதாய அடிப்படையில் தவெகவை பெருமளவில் ஆதரிப்பவர்களாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் திகழ்கின்றனர். அவர்கள் 3.87 சதவீதம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தினை ஆதரிக்கின்றனர். பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் 1.39 சதவீதமும், முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 0.5 சதவீதமும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் த.வெ.கவை ஆதரிப்பவர்களில் அதிகமானோர் பள்ளி அளவிலான கல்வித்தகுதியை கொண்டவர்கள் அல்லது பட்டப்படிப்பு முடிக்காதவர்கள் ஆவர். அவர்கள் 3.6 சதவீதம் பேர் விஜய்க்கு தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர். அதேவேளையில் கல்லூரி முடித்தவர்கள் 2.27 சதவீதம் பேர் தவெகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

விஜயின் த.வெ.கவுக்கு கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்களே அதிகளவில் ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த 3.14 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களை சேர்ந்த 2.62 சதவீதம் பேரும் த.வெ.கவை ஆதரிக்கின்றனர். இதேபோல், விஜய் கட்சிக்கு அரசு ஊழியர்களை விட, சிறு தொழில் புரிவோர், தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் சுயதொழில் புரிவோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் 3.59 சதவீதம் பேர் தவெகவை ஆதரிக்கின்றனர். அரசு ஊழியர்கள் 2.15 சதவீதம் பேர் தங்களுடைய ஆதரவினை விஜய்க்கு தெரிவித்துள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கருத்துக்கணிப்பில் சேர்க்கப்படவில்லை.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என விஜய் சூளுரைத்த நிலையில் அந்த கட்சிக்கு வெறும் 6 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ