spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதுணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன?  ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன?  ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!

-

- Advertisement -

துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக சட்டங்களை விட யுஜிசி விதிமுறைகள்தான் மேலானவை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது மட்டும்தான் தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசியின் புதிய விதிமுறைகள் தொடர்பாக முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பேசியதாவது: மாநில அரசுகள் தவறுதலாக ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் ஆளுநரை வேந்தராக போட்டுள்ளன. அரசமைப்பு சட்டம் ஆளுநர்களை பல்கலைக்கழக வேந்தர் என்று சொல்லவில்லை. நாமாகத்தான் ஒவ்வொரு பல்கலைக் கழகமாக ஆளுநர்தான் வேந்தர் என்று போட்டோம். ஜெயலலிதா உருவாக்கிய இசைப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் தான் வேந்தர் கிடையாது. அதற்கு காரணம் ஆளுநர் சென்னா ரெட்டியுடன் ஏற்பட்ட மோதலாகும். கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் உறவினர் குற்றாலிங்கம் என்பவரை துணை வேந்தராக நியமிக்க முயன்றபோது, சென்னா ரெட்டி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் அப்போதே பல்கலைக்கழக சட்டங்களில் வேந்தர் பொறுப்பு ஆளுநளுக்கு பதிலாக முதலமைச்சர் அல்லது உயர்கல்வி அமைச்சர் என திருத்த நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் இருவரும் சாமாதானமாக போகினர். பின்னர் வந்த கலைஞருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்போது இருக்கும் முதலமைச்சர் கையெழுத்து போட சொல்கிறார். ஆனால் ஆளுநர் போட மறுக்கிறார்.  1949ல் நடந்த அரசியலமைப்பு சட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய அம்பேத்கர் மாநிலங்களுக்கு என்று அரசமைப்பு சட்டம் வழங்கிய இறையாண்மை உள்ளது என தெரிவித்தார். பல்கலைக்கழக சட்டம் போட்டால், ஆளுநர் இன்று வரை கையெழுத்து போடாமால் உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குதான் இறையாண்மை உள்ளது என்று அம்பேத்கர் சொன்னார். பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள நிலம் நம்முடையது. கட்டிடம் நம்முடையது. சம்பளம் நாம் கொடுக்கிறோம். ஆனால் துணை வேந்தரை, அவர் நியமிக்கிறார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

அண்மையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அங்கு ஆளுநரின் புகைப்படம் தான் உள்ளது. அப்போது எண்ணிடம் பேசிய அரசு அதிகாரி ஒருவர் இந்த நிலத்தை நாங்கள் ஆர்ஜீதம் செய்தோம், கட்டிடம் நாங்கள் கட்டி பல்கலைக்கழகம் தொடங்கினோம். ஆனால் முதலமைச்சரின் புகைப்படம் இல்லை அவர் சொன்னார். நான் சொன்னேன் முதலமைச்சர் படம் நிச்சயமாக வைக்க வேண்டும். ஏனெனில் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2026ல் யார் ஜெயித்து முதலமைச்சரானாலும் அவர்கள் படம்தான் மாட்ட வேண்டும் என்று. ஆளுநர் என்பது நியமனப் பதவி. தமிழக ஆளுநர் முதலில் சில துணை வேந்தர்களை நியமித்தார்.  இப்போது யாரையும் நியமிக்க மறுக்கிறார். பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளரை சஸ்பெண்ட் செய்துவிட்டு, துணை வேந்தரை நியமித்தனர். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மறுக்கிறார்.

ugc
ugc

1956ம் ஆண்டில் யூஜிசி சட்டம் வந்தபோது கல்வி, மாநில பட்டியலில் இருந்தது. நமது அரசமைப்பு சட்டம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அது 1935ஆம் ஆண்டின் இந்திய அரசமைப்பு சட்டத்தின் நகல் ஆகும். அதுதான் முதல் அரசமைப்பு சட்டமும் ஆகும். அதில் மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்குமான என்ன என்ன அதிகாரங்கள் உள்ளது என தெளிவாக தெரிவித்துள்ளனர். அதில் கல்வி என்பது மாகாண அரசின் முழு உரிமையில் உள்ளது. மாடர்ன் டென்டல் காலேஜ் வழக்கில்  2016ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி பானுமதி அம்மாள் தனி தீர்ப்பு வழங்கியுள்ளார். உயர் கல்வியில் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ள யூஜிசிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையே கல்வியில் உள்ள வேறுபாட்டை களைவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது மாநில பட்டியலில்  கல்வி இல்லை. பொதுப்பட்டியலுக்கு எப்போது சென்றது என்றால் 1976 அவசர நிலையின் போது ரத்து செய்தது. இப்போது 50 வருடம் ஆகிவிட்டது. இந்த 50 வருடத்தில் நாம் என்ன செய்தோம்?. தமிழ்நாட்டில் நாம் தான் உள்ளோம் என்கிறோம். அப்படி இருந்தும் என்ன பிரயோஜனம். எமர்ஜென்சியை எதிர்த்து மோடி பெரிய கூட்டம் நடத்துகிறார்.  எமர்ஜென்சியில் 42-வது அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தில் வந்த அனைத்தையும் ரத்து செய்வதாக அவர் சட்டம் போட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். கல்வி மட்டும் அல்ல மாநிலத்திற்கான பல அதிகாரங்கள் மத்திய அரசுக்கு போய்விட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

கல்வி, காடுகள், நிலம், மலை, கடல் என அனைத்தும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு சென்றுவிட்டது. குறைந்தபட்சம் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். திமுக, அதிமுக ஆதரவுடன் பல காலம் மத்தியில் ஆட்சி நடந்துள்ளது. கல்வி பொதுப் பட்டியலில் வந்தபோது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பொதுப்பட்டியல் உள்ளதால் இருவருக்கும் பொதுவானதாக இருக்கும் என நினைத்தனர். ஆனால் தற்போது அனுபவத்தில் பொதுப்பட்டியல் என்பது மத்திய அரசின் சட்டமாகி போய்விட்டது. ஏனென்றால் 254 சட்டப்பிரிவு படி மாநில அரசு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு முரண் என்றால் மத்திய அரசின் சட்டமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2006ல் திமுக ஆட்சியில் மருத்துவப் படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதும் என சட்டம் கொண்டுவந்தனர். அதற்கு எதிராக அவர்கள் நீட் தேர்வு கொண்டு வருகின்றனர். அப்போது, எது நிற்கும். நீட் தான் நிற்கும். நீட்டை போக்க என்ன செய்ய வேண்டும். நாம் சட்டம்போட்டு குடியரசுத் தலைவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அது முடியுமா?, அதிமுக அரசு, திமுக அரசு இரண்டும் சட்டம் போட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பினோமா? இரண்டும் பேரும் சட்டம் போட்டனர். ஆனால் 2 சட்டங்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு கல்வி பொதுப் பட்டியலுக்கு போனது தான் காரணம். இது மத்திய அரசுக்கு அசுர அதிகாரம் வழங்குகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது.

நாம் கொண்டு வரும் சட்டம் பெரிதா? யூஜிசி கொண்டு வரும் சட்டம் பெரிதா என்றால் யுஜிசியின் சட்டம்தான் பெரியது என்று உச்சநீதிமன்றம் 4 தீர்ப்புகளில் சொல்கிறது. முதலாவது கல்யாணி மதிவாணன் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட வழக்கில் 2015ல், பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணி புரிந்தவர்கள் தான் துணை வேந்தர் ஆக வேண்டும். இவர் கல்லுரியில் 20 ஆண்டுக்கும் மேல் பணி அனுபவம் பெற்றவர். இவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது வெற்றி பெற்றார். தீர்ப்பில் யுஜிசி விதிகளுக்கும், மாநில பல்கலைக்கழக சட்டத்தில் முரண்பாடு ஏற்பட்டால் யுஜிசி விதிகள் தான் மேலானது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதில் உடன்பாடு உள்ளதா? என்பது முக்கியம் இல்லை. நாட்டில் இன்று அதுதான் சட்டம். இதேபோல் 2022ஆம் ஆண்டில் 3 வழக்குகளில் இதேபோன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டன. குஜராத் மாநிலம் சர்தார் படேல் பல்கலைக் கழகத்தில் இதேபோன்று பிரச்சினை ஏற்பட்டது. நீதிபதி எம்.ஆர்.ஷா தனது தீர்ப்பில், யூஜிசி விதிகளா அல்லது பல்கலைக்கழக சட்ட விதிகள் பெரியது என்று வந்தால், யூஜிசி விதிகள்தான் மேலானது என்று தெரிவித்தார். இதேபோல், கொல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தர் மறுநியமன விவகாரத்தில், யூஜிசி விதிகள் காரணமாக அவரது மறு நியமனம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல், திருவனந்தபுரம் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக வழக்கிலும், யூஜிசி விதிகள் தான் பெரியது என தீர்ப்பு வந்தது. இதற்கு ஒரே மருந்து கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அது இல்லாத வரை  உச்சநீதிமன்றம் மீண்டும் இதை சொல்லிக்கொண்டுதான் இருக்கும். உண்மையில் அந்த தீர்ப்புகளில் மாநில அரசுகளின் உரிமைகள் குறித்து விவாதிக்கவில்லை.

உச்ச நீதிமன்றம் மத்திய அரசு குறித்துதான் கலைப்படுவார்கள்.அவர்கள் மாநில அரசுகள் குறித்து கவலைப்பட மாட்டார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சட்டம் இப்படி இல்லை. இந்த 75 ஆண்டுகளில் மாநில அரசுகளிடம் இருந்து என்ன என்ன அதிகாரங்கள் போய்விட்டது என ஆய்வே செய்யலாம். அப்போதே அம்பேத்கர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாநிலங்கள் எல்லாம் முனிசிபாலிட்டி அளவிற்கு அதிகாரம் அற்றவை என்று. அதற்கு இல்லை இது ஃபெடரல் என்று குறிப்பிட்ட அம்பேத்கர் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது நாடாளுமன்றம் அல்ல, அரசமைப்பு சட்டம் என்று கூறினார். கொடுத்த அரசமைப்பு சட்டம்தான் பறித்துக்கொண்டது. அரசியலமைப்பின் 42-வது சட்டத் திருத்தத்தில் நிறைய அதிகாரங்கள் போய்விட்டது. அதன் பிறகு ஜிஎஸ்டி வரி.  ஒரு அரசனுக்கு வரி விதிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசுக்கு சென்றுவிட்டது.

துணை வேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பாக முதலில் 2010ல் காங்கிரஸ் ஆட்சியில் தான் யுஜிசி விதிகளை கொண்டுவந்தனர். ஆளுநரின் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் என 3 பேர் தேடல் குழுவில் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது புதிதாக இந்த கமிட்டியை ஆளுநர் அமைப்பார் என்றும், துணை வேந்தரை நியமிப்பதும் ஆளுநர்தான் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் அந்த விதிகளில் 2013ல் திருத்தம் கொண்டுவந்தது. அதன் பின்னர் 2018ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில்தான் யுஜிசி சேர்மன் நியமிக்கும் பிரதிநிதி ஒருவர் தேடல் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற விதி இடம்பெற்றிருந்தது. அது தற்போது வரை உள்ளது. இந்த அனைத்து திருத்தங்களிலும் ஆளுநர்தான் தேடுதல் குழுவை அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது தமிழ்நாடு அரசு தான்.

ugc
ugc

யுஜிசியின் புதிய விதிகளில் முதன்முறையாக கல்வியாளர்கள் அல்லாதவர்களும் பல்கலைக் கழக துணை வேந்தராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது பெரு முதலாளிகளின் மேலாளராக உள்ளவர்கள், நாளை பல்கலைக் கழக துணை வேந்தராக வரலாம். முன்பு லேட்டரல் என்ட்ரி முறையில் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசில் இணைச் செயலாளராக கொண்டு வர முயன்றனர். எதிர்ப்பு எழுந்ததால் கைவிட்டனர். அதேபோல் தற்போது தொழிற் துறையை சேர்ந்தவர்கள் துணை வேந்தராக வரலாம். உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பது கல்வி பொதுப்பட்டியலுக்கு வந்த பின்னர் தான் பிரச்சினை ஏற்படுகிறது. 1976க்கு முன்பு இதுபோன்ற பிரச்சினை ஏற்படவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ