விஜய், அதிமுக – பாஜக கூட்டணி வைத்தாலும், அல்லது விஜய் தனி அணி அமைத்து போட்டியிட்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


தவெகவை வைத்து நடைபெறும் கூட்டணி அரசியல் கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கிடைக்கும் பணம் கிடைத்தால் போதும். கூட்டநெரிசலுக்கு விஜய் என்ன செய்வார்? என்று சமாதானம் ஆகிவிட்டார்கள். அப்படி அவர்களே சமாதானம் ஆகிறபோது, அரசியல் கட்சிகள் என்ன செய்வார்கள்? விஜய்க்கு இருக்கும் பிரபலத்தை வைத்து இன்னும் 5 சதவீதம் வாக்குகளை பெற்றுவிட்டால், நாம் வெற்றி பெற்றுவிட மாட்டோமா? என்கிற எண்ணம்தான் விஜயை கூட்டணிக்கு அழைப்பதன் நோக்கமாகும். அதிமுக விஜயை கூட்டணிக்கு அழைப்பதன் மூலம் தங்களுடைய பலவீனத்தை தான் வெளிக் காட்டுகிறார்கள். ஜெயலலிதா விட்டுச்சென்ற 44 சதவீதம் வாக்குகளில், தற்போது 20 சதவீதம் வாக்குகளை தான் எடப்பாடி வைத்திருக்கிறார்.
பாஜகவிடம் அதிகபட்சம் 5 சதவீதம் வாக்குகள் தான். இருவரும் சேர்ந்து 25 சதவீதம் வாக்குகள் தான் வரும். இதை வைத்து எப்படி வெற்றி பெற முடியும். அப்போது விஜய், கூட்டணிக்கு வந்தால் சரியாகும். விஜய் ஒரு சிக்கலில் மாட்டினால், உதவிக்காக பாஜகவிடம் வருவார். அதற்காக தவெகவில் உள்ள பாஜகவின் ஸ்லீப்பர் செல்களான ஆதவ், அருண்ராஜ் போன்றவர்களை வைத்து கொலை வழக்கில் விஜயை இழுத்துவிட்டார்கள். தற்போது சிபிஐ விசாரணையின் மூலம் விஜயின் குடுமி, அமித்ஷாவின் கைகளில் வைத்துக் கொண்டார்.

விஜய்க்கு 20 சதவீதம் வாக்குகள் உள்ளதாக பில்ட்அப்களை ஏற்றி, மொத்தம் 46 சதவீதம் வாக்குகளை பெறுவோம் என்று பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் வெற்றி பெறலாம் என அமித்ஷா கணக்கு போடுகிறார். ஆனால் விஜய், பாஜக உடன் சேர்ந்தால் அவரிடம் இருக்கும் வாக்கு வங்கியும் போய்விடும். கரூர் கூட்டநெரிசலுக்கு முன்பு விஜய் 10 சதவீதம் வாக்குகளையாவது வாங்கி விடுவார் என்று நினைத்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 4 முதல் 6 சதவீதம் தான் வரும். கருரில் பாதிக்கப் பட்டவர்களை பார்க்க செல்வதை யார் தடுத்தார்கள்? அனிதா, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என்று விஜய் சென்றார் அல்லவா? இங்கே ஏன் செல்ல வில்லை.
திமுக, அதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் தங்களுடைய சொந்த வாக்குகளை வைத்து வெற்றி பெற முடியாது. பொதுமக்களின் வாக்குகள் தேவை. தற்போது பொதுமக்கள் அனைவரும் விஜய் ஒரு மண் குதிரை என்பதை பார்த்துவிட்டார்கள். இனி அவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க மாட்டார்கள். விஜயின் ரசிகர்கள் மட்டும் தான் வாக்களிப்பார்கள். இந்த வாக்குகள் 4-6 சதவீதம் வாக்குகள் தான் வரும். அப்படி 6 சதவீதம் வைத்துள்ள விஜய் கூட்டணி வர வேண்டும் என்று சொன்னால், அதிமுக எவ்வளவு பலவீனமாக இருக்கும் என்று பாருங்கள்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயால் முதலமைச்சர் வேட்பாளர் என்றெல்லாம் பேச முடியாது. தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது. ஒரு வேளை விஜய், பாஜக உடன் கூட்டணி சேரவில்லை என்றால் விஜயை சிபிஐ விசாரணைக்கு அழைக்கும். பேருந்தை பறிமுதல் செய்யும். கேமராக்களின் ஹார்டு டிஸ்க்குகளை, டிரோன் கேமராக்களை பறிமுதல் செய்வார்கள். நீங்கள் ஜனநாயகன் படப்பிடிப்பு நடத்தும்போது தான் கூட்டநெரிசல் ஏற்பட்டது என்று குற்றச்சாட்டு வந்தது. அப்போது அதை நிரூபிக்க வேண்டாமா? அப்போது படத்தின் காட்சிகளை எல்லாம் எடுத்து வைத்து விடுவார்கள். தேவைப்பட்டால் விஜய், கைது செய்யப்படலாம்.
விஜய் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, உ.பியில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறார். அரசு அதிகாரிகள் பேட்டி அளித்ததால், ஒருதலை பட்சமாக செயல்படுவதாக சொல்கிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு 7 தேர்தல் ஆணைய அதிகாரிகள் பதில் அளித்தனர். அப்போது, அவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை?

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் மீண்டும் அஸ்ரா கார்க் விசாரணை வரும். அப்போது கருர் சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை பேரும் கைதாவார்கள். ஜனநாயகன் படத்தின் பிலிம் எல்லாம் பறிமுதல் செய்யப்படும். கருர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் தான் சிபிஐ விசாரணை தொடரும். அமித்ஷா என்ன முடிவு எடுக்கப் போகிறார். ஆதவ் அர்ஜுனா எப்படி போய் விஜயை அடகுவைத்துவிட்டு வந்தார் என்பதும் நமக்கு தெரியாது. விஜய் பாஜகவால் உருவாக்கப்பட்டவர். அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்பது இன்றைக்கு உறுதியாகிவிட்டது.
கரூர் சம்பவத்தால் சீமானுக்கு ஏற்பட இருந்த பாதிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. விஜயிடம் தற்போது 4- 6சதவீத வாக்குகள் தான் இருக்கிறது. அவர் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வந்தால் வராது. அதேவேளையில் எடப்பாடி பாஜகவை கழட்டிவிட்டு தவெக உடன் சேர்ந்தால் 26 சதவீதம் வாக்குகள் தான் வரும். அதனால் பயனில்லை. எனவே விஜய் தனியாக நின்று வாக்குகளை பிரிக்க வேண்டும். 4 முனை போட்டியாக வந்தாலும், அது அமித்ஷாவின் ஏற்பாடு தான்.

இன்றைய சூழலில் அதிமுக, பாஜக, தவெக சேர்ந்தால் 30 சதவீதம் வாக்குகள் தான் வரும். அரசுக்கு எதிரான மனநிலை என 35 சதவீதம் வாந்தாலும் கூட திமுக 40 சதவீதம் இருக்கும் வெற்றி பெற முடியாது. விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்கிறார் என்றால் அவர் மீதான நம்பகத் தன்மை போய்விடும். அதன் பிறகு விஜய் நடிக்க போக வேண்டியது தான். ஒருவேளை விஜய் தனித்து கூட்டணி அமைத்தால், தவெக 6, டிடிவி தினகரன் 2, ஓபிஎஸ் 3, தேமுதிக 2, பாமக 2 சதவீதம் என மொத்தம் 15 சதவீதம் வரும். அண்ணாமலையும் தனிக்கட்சி தொடங்கி கூட்டணி அமைத்தால், 4 சதவீதம் வாக்குகள் வரும். மொத்தம் 19 சதவீதம் வாக்குகள் வரும். அதிமுக – பாஜக 23.5 சதவீதம். தவெக கூட்டணி 20 சதவீதம், திமுக 40, நாதக 8-10 சதவிதம். அதேவேளையில் திமுக 40 சதவீதம், அதிமுக பாஜக 28.5 சதவீதம், தவெக கூட்டணி 20 சதவீதம், நாதக 10 சதவீதம் என மொத்தம் 98 சதவீதம் வரும்.இது தான் இன்றைய களநிலவரமாகும்.
இதில் மாற்றம் ஏற்பட்டால் அமித்ஷா, இவிஎம்மின் அருள் ஆகும். ஆனால் அதற்கு ஒரு பிம்பம் உருவாக வேண்டும். சர்வேயில் விஜய்க்கு 20 சதவீதம் வாக்குகள் உள்ளது என்று நம்ப வைக்க வேண்டும். அதற்கு பிறகு எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்து 20 லட்சம் பேரை நீக்கியும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தால் பாஜக வெற்றி பெறும். அப்படி அமைகிற ஆட்சியும், பாஜகவின் பொம்மை ஆட்சியாகத்தான் இருக்கும். பாஜக ஆட்சி வருவதற்கு துணை போகும் யாரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்..


