திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் ஏற்றப்பட உள்ள மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் 1,000 மீட்டர் காடாத் துணிக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு துணி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர தீபமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்காகப் பயன்படுத்தப்படும் தீபக் கொப்பரைக்கு கோயிலில் ஏற்கனவே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. அதனை நாளை கோயில் ஊழியர்கள் மலை உச்சிக்குக் கொண்டு செல்ல உள்ளனர்.
இதேபோல், மகா தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 1,000 மீட்டர் காடாத் துணி மாட வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைக்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, வரும் 24ஆம் தேதி மகா தீபம் ஏற்றுவதற்காக இந்த 1,000 மீட்டர் காடாத் துணியும் 2,668 அடி உயர தீபமலையின் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. மகா தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
