சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால வழிபாட்டை முன்னிட்டு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி அரீக்கரா சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி நடை திறந்து வழிபாடுகளைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். தொடக்க நாளிலேயே சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சபரிமலையில் ஒரே நாளில் மொத்தம் 60,635 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 49,140 பேர் ஆன்லைன் விர்ச்சுவல் கியூ முன்பதிவு மூலம் வந்தவர்கள் ஆவர். முன்பதிவு செய்திருந்தவர்களில் சுமார் 16 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன முன்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு
பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, விர்ச்சுவல் கியூ முன்பதிவு எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு 71 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 50 ஆயிரம் விர்ச்சுவல் கியூ முன்பதிவு இடங்களைப் படிப்படியாகத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகள் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், முன்பதிவு முறைகேடுகளைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சைபர் தடயவியல் விசாரணை
முன்பதிவு செய்தும் தரிசனத்திற்கு வராத பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இதற்கான காரணத்தைக் கண்டறிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு சைபர் தடயவியல் பிரிவின் உதவியை நாடியுள்ளது.
மேலும், ஒரே நபர் அல்லது குழுவினர் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்கிறார்களா என்பதைக் கண்டறிய முன்பதிவு செய்தவர்களின் ஐபி முகவரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அனைவரும் சிரமமின்றி ஐயப்பனைத் தரிசிக்கவும் தேவையான நடவடிக்கைகளை தேவசம் போர்டு மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
