சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றுபவர் பிரகாஷ்(35). நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அயனாவரம் P.E கோயில் தெரு வடக்கு மாட வீதியில் குடிபோதையில் தந்தையும் மகனும் கட்டிப்புரண்டு ரோட்டில் உருண்டு சண்டை போடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் பிரகாசுக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து காவலர் பிரகாஷ் ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் தேவராஜ்(39), அவரது தந்தை ராஜேந்திரன் இருவரும் குடிபோதையில் சண்டை போட்டபடி அப்பகுதி மக்களை நிம்மதியாக தூங்கவிடாமல், ஆபாச வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தனர். காவலர் பிரகாஷ் விசாரணை நடத்த முயன்றபோது, எங்கள் சண்டையை விசாரிக்க நீ யார்? எங்கள் வரிப்பணத்தில் நீ சம்பளம் வாங்குகிறாய்? என கூறியதுடன் ஆபாச அர்ச்சனை செய்து காவலர் பிரகாஷை, தேவராஜ் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த காவலர் பிரகாஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.