சென்னை மாநகராட்சியில் உள்ள மயானங்களில் பொதுமக்களுக்கு இலவச சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சிசிடிவி கண்காணிப்பு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 209 பொது மயானங்களில்
விலையில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில மயானங்களில் பொது மக்களிடம் கட்டாயப்படுத்தி கையூட்டு பெறப்படுவதாகவும் , சில மயானங்களில் வெளிநபர்களின் அத்துமீறல் செயல்பாடுகள் உள்ளதாகவும் மாநகராட்சிக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சியின் மேயர் பிரியா தலைமையில் சென்னையில் உள்ள மயானங்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அனுபவத்தின் படி, பல மயானங்கள் சுத்தமும் சுகாதாரமும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கான காரணங்களை மேயர் அதிகாரியிடம் கேட்டரிந்துள்ளார்.
பின்னர் மயானத்தில் வெளி நபர்களின் அத்துமீறல் செயல்பாடுகளை தவிர்க்க சிசிடிவி கண்காணிப்பு உறுதிப்படுத்தவும், தேவையெனில் சுற்றுப்புற பாதுகாப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்கவும் பிரியா உத்தரவிட்டார். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்கானிப்பதுடன், பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும், மயானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இலவச மயான சேவை பெறுவதை உறுதி செய்வதுடன் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க ஏதுவாக மயானங்களில் 1913 என்ற இலவச புகார் எண் காட்சிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.


