தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் மதுபாட்டிலால் தாக்கி கொண்டனா் என்பது போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை அயனாவரம் தொகுதிக்குட்பட்ட ஜாயிண்ட் ஆபீஸ் சாலையில் தவெக கட்சியின் வேட்பாளரான அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திடீரென சிறிய பாட்டில் துண்டு ஒன்று எங்கிருந்தோ வந்து கலைவாணி(45) என்பவா் மீது விழுந்தது. இதனால் அவா் பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது கூட்டத்தில் பாட்டில் துண்டு வந்து பட்டதும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி வசப்பட்டு நாஞ்சில் சம்பத் பேசி கொண்டிருந்த போது, திடீரென மைக்கை பிடித்து இங்கு பாட்டில் வந்து விழுந்ததற்கு தமிழக முதல்வர் தான் காரணம் எனக் கூறினாா்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அயனாவரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார், பாட்டில் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தினார். விசாரணையில் தவெக உறுப்பினர்களான அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக்(19) என்பவா்கள் தவெக பொதுக்கூட்டதை பாா்ப்பதற்காக வந்து, அருகிலுள்ள லாட்ஜில் தங்கியுள்ளனா்.
மதுக்கடைகள் நேற்று விடுமுறை என்பதால் அப்புக்குட்டி முன்கூட்டியே மதுபானத்தை வாங்கி வைத்துக்கொண்டு, ரித்திக் என்பவருடன் சோ்ந்து லாட்ஜில் மதுஅருந்தி உள்ளாா். மதுபோதையில் இருவருக்கு வாய்தகராறு முற்றவே, மதுபாட்டில்களால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது அப்புகுட்டி, ரித்திக் மீது பாட்டில் வீசி உள்ளார். ரித்திக் தன் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக நகர்ந்து உள்ளார். அந்த பாட்டில் உடைந்து ஒரு சிறு துண்டு பொதுக்கூட்டத்தில் விழுந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து நேற்று இரவு அயனாவரம் போலீசார் அப்புகுட்டி மற்றும் ரித்திக் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தவெக கூட்டத்தில் பாட்டில் வீசியது தொடர்பாக வில்லிவாக்கம் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா ‘சினிமா காட்சிகள் போல் வீர வசனம் பேசிய’ வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதே நேரம் பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்ததும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனால் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலர், ‘ஆதவ் அர்ஜூனாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் அவர் முதல்வர் குறித்து தவறாக பேசி பொதுமக்களிடையே உண்மைக்கு புறம்பாக பொய்யை உணர்ச்சி வசப்பட்டு பேசுவது போல் முழக்கம் இடுகிறார் என்று கேலி கிண்டல் செய்து பதிவு செய்து வருகின்றனர்.
