சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜீப்பிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் மையத்தில் நடந்த அதிர்ச்சி
வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி (HDFC) வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ‘கேஷ் செக்யூர் சிஸ்டம்’ (Cash Secure System) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்பட்டு வருகிறது.

வழக்கம் போல், வேளச்சேரியில் இருந்து ரூ.4 கோடியே 69 லட்சம் ரொக்கத்துடன் மொத்தம் 105 பெட்டிகளுடன் ஜீப் புறப்பட்டது. ஊழியர்கள் வழியில் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பிக்கொண்டே வந்தனர்.
இந்நிலையில், 15வது ஏடிஎம் மையமான பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் நிரவ முயன்றபோது, 3 பெட்டிகள் குறைவாக இருந்தது ஊழியர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அதிர்ச்சியடைந்த அவர்கள், வந்த வழியே திரும்பிச் சென்று பார்த்தபோது, முரசொலி மாறன் பாலம் மேல் பகுதியில் 2 காலிப் பெட்டிகள் மட்டும் கிடந்தன. ஆனால், மற்றொரு பெட்டியை காணவில்லை. அதில் ரூ.24 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் விசாரணை தீவிரம்
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஐ.சி.எஃப் காவல் நிலையப் போலீஸார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். பணியில் ஈடுபட்டிருந்த பின்வரும் நான்கு பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது:
சதீஷ் (34) – மூத்த ஏடிஎம் காப்பாளர் (Senior ATM Custodian)
மைக்கேல் (62) – பாதுகாப்பு அதிகாரி (Security)
இயேசு பாதம் (40) – ஓட்டுநர் (Driver)
அருள் பிரசாத் (21) – இளநிலை ஏடிஎம் காப்பாளர் (Junior ATM Custodian)
போலீசாரின் சந்தேகக் கோணம்
பணம் கொண்டு சென்ற ஜீப்பின் பக்கக் கதவைச் சரியாக மூடி லாக் செய்யவில்லை என்று அந்த நான்கு பேரும் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்துள்ளனர். மேலும், காலிப் பெட்டிகள் கிடந்ததாகக் கூறப்படும் முரசொலி மாறன் பாலத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.
இதனால், அவர்கள் நான்கு பேரும் திட்டமிட்டு நாடகமாடி பணத்தை மாய்த்தார்களா அல்லது உண்மையில் பெட்டி கீழே விழுந்ததா என்ற பல்வேறு கோணங்களில் ஐ.சி.எஃப் காவல் துறை ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் புதிய அலுவலகத்தில் நிர்வாக வசதிகள்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரியது தமிழக அரசு!
