சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி திடீரென 8 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள விவகாரம், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரூ. 450 ஆகச் செலுத்தப்பட்ட வரி தற்போது ரூ. 4,500 ஆகவும், பல இடங்களில் ரூ. 11,000 ஆக இருந்த வரி ரூ. 32,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ட்ரோன் அளவீடு முறைக்கு கவுன்சிலர் எதிர்ப்பு
வடசென்னையைச் சேர்ந்த 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் இதுகுறித்துத் தெரிவிக்கையில், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ரூ. 450 மட்டுமே வரி செலுத்திய நிலையில், தற்போது அது திடீரென ரூ. 4,500 எனப் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ட்ரோன் (Drone) மூலம் சென்னை மாநகராட்சி முழுவதும் அளவீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

மாநகராட்சியின் வருவாயை உயர்த்த வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும், முறையான விவாதமும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளனர். எந்த அறிவிப்பும் இல்லாமல் ட்ரோன் மூலம் பார்த்து வரியை உயர்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநகராட்சி தரப்பில் வரியை உயர்த்தவில்லை என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் பல மடங்கு உயர்ந்துள்ளது சாமானிய மக்கள் மீது நடத்தப்படும் மறைமுகச் சுமையாகும்.”
கூலித் தொழிலாளர்கள் மீது பேராப்பு: பொதுமக்கள் வேதனை
வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்மணி தெரிவிக்கையில், “இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்களது சொத்து வரி ரூ. 11,000 ஆகத்தான் இருந்தது. ஆனால், தற்போது அது ரூ. 32,000 ஆக உயர்த்தப்பட்டு வந்துள்ளது. வடசென்னையில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். இத்தகைய எளிய மக்களின் மீது திடீரென இவ்வளவு பெரிய தொகையைச் சுமத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. ட்ரோன் மூலமாக ஆய்வு செய்தோம் என்று கூறி முறையற்ற வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்குச் செய்யும் பெரும் மோசடியாகும். இந்த அதீத சொத்து வரி உயர்வை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.”
மக்கள் கோரிக்கை
சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் திடீரென உயர்த்தப்பட்டுள்ள இந்தச் சொத்து வரி உயர்வைச் சென்னை மாநகராட்சி உடனடியாக மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.
