Homeசெய்திகள்சென்னைசென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்! 2,000-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்! 2,000-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு

-

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

1,562 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மொத்தம் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

4 கடற்கரை பகுதிகளில் சிலை கரைப்பு

சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த பகுதிகளில் ராட்சத கிரேன்கள் மூலம் வாகனங்களில் இருந்து சிலைகள் இறக்கப்பட்டு, டிராலிகள் வழியாக கடல் முனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் சிலைகளை கடலுக்குள் எடுத்துச் சென்று கரைத்தனர்.

26 வழித்தடங்களில் பிரம்மாண்ட ஊர்வலம்

சென்னை காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 17 வழித்தடங்களிலும், தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் இருந்து 4 வழித்தடங்களிலும், ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் இருந்து 5 வழித்தடங்களிலும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இதன்படி மொத்தம் 26 வழித்தடங்கள் வழியாக விநாயகர் சிலைகள் கடற்கரை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிலை கரைப்பு நிகழ்வையொட்டி சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக 16,500 போலீஸார் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளிலும் சிலைகள் கரைக்கப்பட்டன. ஆவடி காவல் ஆணையரக எல்லையில் மட்டும் 788 சிலைகள் புலிகாட், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் மற்றும் காட்டுப்பள்ளி பகுதிகளில் கரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதியாக நிறைவடைந்த விநாயகர் ஊர்வலம்

சிலை கரைப்பு மையங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சில பகுதிகளில் சிலை ஏற்றிச் சென்ற வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்ததால் போக்குவரத்து மெதுவாக நகர்ந்ததாகவும், பின்னர் நிலைமை சீரமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் முக்கிய மாற்றம்?

இதற்கிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்த ஆண்டு முதல் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உறுதியளித்துள்ளது.

மேலும், கடலில் சிலைகளை கரைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி அவசியம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை நீர்நிலைகளுக்கு பதிலாக தற்காலிக குளங்களில் சிலைகளை கரைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் 86,489 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! அம்பத்தூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் சிறப்பு முகாம் தீவிரம்

MUST READ