‘கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் தரவில்லை’-கூடுதல் காவல் ஆணையர்
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை, புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷ்த்திரா கவின் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் காவல் துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கலாஷ்த்ராவில் மாணவிகள் நேற்று இரவும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ காவல்துறைக்கு எந்த விதமான புகார் வரவில்லை. புகார் வரும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை யாரும் பதிவிட வேண்டாம். மேலும் நேற்று மாணவிகள் போராட்டம் நடத்திய போது காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்ற போதும் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து எந்த ஒரு புகார் கொடுக்கப்படவில்லை” எனக் கூறினார்.