spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

-

- Advertisement -

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறைக்கான புதிய பட்ஜெட்டில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களின் கல்வித் திறன் உயர்வு மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

தொழில்நுட்ப வசதி மேம்பாடு
மேல்நிலை, உயர்நிலை, மற்றும் மையப்பள்ளி என 100 சென்னை பள்ளிகளுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய  பன்முகசெயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரம் (MULTI FUNCTIONAL PRINTER) ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

we-r-hiring

உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
சென்னையில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு மேல் பயிலும்  180 பள்ளிகளில்  தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக் குழு (PTA / SMC) மூலம்  10 மாதங்களுக்கு ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

பள்ளிகளுக்கு ஒரே மாதிரி வண்ண குறியீடு
250 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், மதிய உணவு சமையற்கூடங்கள், ஆய்வகங்கள், அரங்கங்கள், கழிப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர்கள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு  ஒரே மாதிரியான வண்ண குறியீடு (Color Coding) செய்ய ரூ. 20.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து  சென்னை  மேல்நிலைப் பள்ளிகளில்   12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான ஒரு வருட சிறப்பு பயிற்சிக்கு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மின்சார மற்றும் பராமரிப்பு பணிகள்
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள சென்னை பள்ளிகளில்  மின்வசதிகள், மோட்டார் மற்றும் பம்பு போன்றவைகளில் ஏற்படும் பழுதுகளை சரிபார்ப்பதற்கும் மற்றும்  வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கும், ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

யோகா & தற்காப்புக் கலை
பள்ளிகளில் பயிலும்  6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும்.

காலணி அறை & ஆசிரியர் வசதிகள்
206 தொடக்க மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும்  மாணவ-மாணவியர்களுக்கான  காலணி வைப்பு அறை  ரூ.90.00 இலட்சம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  தேவையான மேசைகள், நாற்காலிகள் கொள்முதல் செய்ய  ரூ.2.60 கோடி நிதி  ஒதுக்கீடு  செய்யப்படும்.

கட்டிடப் பணிகள்
சென்னை பள்ளிகளில்  பழுதடைந்த 95 பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல்,  சிதிலமடைந்த 9 கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு  புதிய கட்டடங்களைக் கட்டுதல், 113 கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல்  மற்றும் 14 பள்ளிகளில்  சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள்     ரூ.40 கோடி மதிப்பீட்டில்  மேற்கொள்ளப்படும்.

அகராதி வழங்கல்
சென்னை நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும்       24,118 மாணவ-மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கில அகராதி (Dictionary) ரூ.37 இலட்சம் செலவில்  வழங்கப்படும்.

நவீன அறிவியல் மையம்
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், இயற்பியல், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடங்களில் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட ஒரு புதிய நவீன  அறிவியல் மையம்  (Modern Science Centre) உருவாக்கப்படும்.

உளவியல் ஆலோசகர்கள்
மாணவ-மாணவியர்களுக்கு  உளவியல் ஆலோசனைகள் வழங்க 46 உயர்நிலைப் பள்ளிகளுக்கு  தேவையான 17 உளவியல் ஆலோசகர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில்  10 மாதங்களுக்கு ரூ.59.50 இலட்சம் மதிப்பீட்டில் நியமனம்  செய்யப்படுவார்கள்.

சிறப்பு பள்ளிகள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் – 9ல் உள்ள தசைத்திறன் குறைபாடுள்ள (Muscular Dystrophy) சிறப்பு குழந்தைகளுக்கான  சிறப்பு பள்ளியைப் போன்று இதர 14 மண்டலங்களிலும்  பொது-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) மற்றும் அரசு சாரா நிறுவனம் (Non Governmental Organization) மூலம் சிறப்பு பள்ளிகள் நிறுவப்படும்.

புதிய பேருந்துகள்
பெருநகர  சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட   விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில்  உள்ள சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் 11  பேருந்துகள்  ரூ.4 கோடி மதிப்பீட்டில்  இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

இணைப்புப் பாடப்பயிற்சி
பள்ளி செல்லா மாணவ-மாணவியர்கள்,  இடை நின்ற மாணவ-மாணவியர்கள், மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து அவர்களுக்கான அடிப்படைக்  கல்வியைக் கற்பிக்க 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளியில் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளை ஒதுக்கி  இணைப்புப் பாடப்பயிற்சி (Bridge Course) வழங்கல்.

இந்த அறிவிப்புகள் மூலம், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி தரத்தையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் நோக்குடன் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

MUST READ