வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், அங்கு பணிபுரியும் பராமரிப்பாளர்களே இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அலுவலகப் பின்புறத்தில் குவியல் குவியலாக மதுபாட்டில்களைக் கொட்டி வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1,760 வீடுகள் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள அலுவலகத்தின் பின்புறத்திலும், சுற்றுச்சுவர் ஓரத்திலும் குவியல் குவியலாக காலி மதுபான பாட்டில்கள் தேங்கிக் கிடக்கின்றன. குடியிருப்புவாசிகள் யாரும் அங்கு மது அருந்தாத நிலையில், அங்கு ‘இன்சார்ஜ்’ மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களே இரவு நேரங்களில் அங்கே அமர்ந்து மது அருந்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

’வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ குடியிருப்பைப் பராமரிக்க வேண்டியவர்களே, தங்களது அலுவலகத்தை ஒட்டிய பகுதியிலேயே மது அருந்திவிட்டு, பாட்டில்களைக் குவித்து வைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாரியத்தின் உயர் அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் உயர்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே மது அருந்திவிட்டு பாட்டில்களைக் கொட்டிச் சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும் ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றிய அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
