சென்னையில் உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான (IIRSI 2026) இரண்டு நாள் சர்வதேச மாநாட்டைத் தமிழகம் மற்றும் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்திய உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை கழகத்தின் (IIRSI) சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் கண் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

கண் மருத்துவத்துறையில் நவீனக் கற்றல், கூட்டுப்பணி மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டில், மருத்துவ வல்லுநர்கள் நேரடியாக வழங்கும் 9 பயிற்சி அமர்வுகள் (Live Sessions) இடம்பெறுகின்றன. மேலும், கண் சிகிச்சை நிபுணர்களின் 250-க்கும் மேற்பட்ட சிறப்புரைகளும், 500-க்கும் மேற்பட்ட அறிவியல் தலைப்புகள் குறித்த விவாதங்களும் நடைபெற உள்ளன.
இம்மாநாட்டில் கண்புரை, ஒளிவிலகல் அறுவை சிகிச்சை, விழிவெண்படலம் (Cornea), விழித்திரை (Retina), கிட்டப்பார்வை மற்றும் பொதுவான கண் மருத்துவத்தில் உலக அளவில் ஏற்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் விரிவான விளக்கங்களை அளிக்கின்றனர். அத்துடன், பன்னாட்டுப் பேராசிரியர்களின் மருத்துவ விரிவுரைகள் மற்றும் நேரடி அறுவை சிகிச்சை விளக்கங்களும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
தொடக்க விழாவில், இந்திய உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை கழகத்தின் தலைவர் டாக்டர் ஜீவன் சிங் திதியால், IIRSI பொதுச் செயலாளர் டாக்டர் அமர் அகர்வால் உள்ளிட்ட முக்கிய கண் மருத்துவப் பிரமுகர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
