Homeசெய்திகள்சென்னைசமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல" – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர்...

சமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல” – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

-

- Advertisement -

சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ அல்லது படிப்பறிவின்மையோ கிடையாது; மக்களிடையே சமூக இணக்கம் இல்லாததே முக்கியப் பிரச்சினை” என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசினார்.
ஆளுநர் அர்லேகர்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான மக்கள் மாளிகையில், பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதே எழுதிய ‘பில்கிரிம் ஆஃப் சமரசதா’ (சமரசத்தின் பயணி) என்ற அவரது வாழ்க்கை மற்றும் லட்சியம் குறித்த சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார்.

we-r-hiring

“அடுத்த முறை தமிழில் பேச முயற்சிப்பேன்”
​விழாவில் தமிழில் ‘வணக்கம்’ எனக் கூறித் தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது:
“இங்கு உங்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு வெட்கமாக உள்ளது. தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் நிலையில் நான் தமிழைத் தெரிந்துகொள்ள வேண்டும்; ஏனெனில் அது என்னுடைய மொழி. அடுத்த முறை உங்களிடம் தமிழில் பேச நிச்சயம் முயற்சிப்பேன். இந்த புத்தகத்தை டெல்லியில் ஹிந்தி மொழியில் மகாராஷ்டிர ஆளுநர் வெளியிட்டார். தற்போது இதன் ஆங்கிலப் பதிப்பை மக்கள் மாளிகையில் நான் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

​நான் கோவாவில் சிறு குழந்தையாக இருந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த தாதா அவர்கள், அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் அனைத்து சமூகத்தினரின் பிரச்சினைகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர். சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ, படிப்பறிவின்மையோ அல்ல; மாறாகச் சமூகத்தில் இணக்கம் இல்லாததும், இந்த மனிதர் தாழ்வானவர், தீண்டத்தகாதவர் என்ற எண்ணம் நிலவியதும்தான்.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி
​இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தியபோது, நம்மை ஜாதியைக் குறிப்பிடுமாறு சொன்னார்கள். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த அவர்களுக்கு அது தேவைப்பட்டது. அதன் விளைவாகவே ஜாதி ஒழியாமல் இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் பீகார், கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் இந்த ஜாதி ரீதியான பிரச்சினை இருப்பதை நான் அறிந்துள்ளேன். சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகள் கடந்தும், இவற்றை முழுமையாகச் சரி செய்வதற்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது. ஒரு மனிதன் தவறு செய்தால் அந்தத் தனிமனிதனுக்குத்தான் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே ஒரு சமூக மக்கள் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் அவலம் நிலவுகிறது.

அரசுடன் இணைந்து செயல்படத் தயார்
​சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரி செய்ய முயற்சி செய்பவர்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் ஆளுநர் மாளிகையை அணுகலாம். தேவைப்பட்டால், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகச் செயல்படும் தமிழக அரசின் முதலமைச்சரிடம், நமது சகோதரர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு நான் அறிவுறுத்துவேன். அதேநேரத்தில் ஆளுநரிடமும், அரசிடமும் உங்களுக்கான எதிர்பார்ப்புகள் இருந்தால் தெரிவியுங்கள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காகச் செயல்படுவோம்” என்று ஆளுநர் அர்லேகர் பேசினார்.

பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதே உரை
​முன்னதாக மேடையில் பேசிய நூலாசிரியர் பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதே, “சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்குக் கல்வி, நிலம், வேலைவாய்ப்பு ஆகியவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து இப்புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரம் குறித்த நேரடி கள ஆய்வின் அடிப்படையிலேயே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதலமைச்சர் இதனைப் புரிந்துகொண்டு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

MUST READ