சென்னை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
முதலமைச்சர் வருகை தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், மேயர் பிரியாவும் அதிகாரிகள் மீது ஆவேசமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

“முன்னாடியே சொல்ல வேண்டாமா?”
இதுகுறித்து கேள்வி எழுப்பிய மேயர் பிரியா, “நான் என்ன காலையில் இருந்து ரிப்பன் பில்டிங்கிலேயே இருக்க முடியும்? முதலமைச்சர் வரப்போகிறார் என்றால் முன்னாடியே சொல்ல வேண்டும்” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முக்கிய நிகழ்வுகள் மற்றும் முதலமைச்சரின் வருகை தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்பதை அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?
மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. “மாமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு ஏதேனும் அறிவிப்பு வந்திருக்கிறதா? எத்தனை முறை சொல்வது?” என்று மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
“மாமன்றக் கூட்டத்தையே கலைத்துவிடுங்கள்!”
தொடர்ந்து, அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய மேயர் பிரியா, “பேசாமல் மாமன்றக் கூட்டத்தைக் கலைத்துவிடுங்கள்” என்று ஆவேசமாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் குறைபாடுகள் இருப்பதாக எழுந்துள்ள இந்தப் புகார், மாநகராட்சி வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறதா, அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்விகள் இந்த விவகாரத்தின் மூலம் எழுந்துள்ளன.
சென்னை புதுப்பேட்டை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
