29 பேரை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் நோய் இருந்தது உறுதியானது. இதனால், நாய் கடிக்கு ஆளான அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பக்கத்து தெருவிற்கு கூட வாகனத்தில் செல்வதை காண முடிகிறது. ஏதோ வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டதாக எண்ண வேண்டாம். அவர்களுக்கு நிகரான ஆபத்துடன் சென்னையில் முக்கிய தெருக்களை ஆக்ரமித்துள்ளன தெருநாய்கள்.
சென்னை திருவொற்றியூரில், பரபரப்பான சாலையில், ஒரு மணிநேரத்திற்குள் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் வெறிபிடித்த தெருநாயை அடித்தே கொலை செய்தனர். நன்றியுள்ள காவல் நாயகனாக கருதப்படும் நாய்கள், தற்போது உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஜீவனாக மாறி வருகின்றன. அதற்கு, இதுபோன்ற சம்பவங்களே சான்றாக உள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்துவதில், அரசு மேற்கொள்ளும் இனவிருத்தி கட்டுப்பாடு விதிகள், பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையில் ஒரு மணி நேரத்திற்குள் பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் நோய் இருந்தது உறுதியானது. இதனால், நாய் கடிக்கு ஆளான அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தெரு நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி விரைவில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளனர்.