திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி திருமண மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மணமகன் அறையில் கிடைத்த நகைப் பெட்டியை ஒப்படைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர். இவர்கள் கடந்த மாதம் 27-ம் தேதி அயப்பாக்கத்தில், நடைபெற்ற தங்களது உறவினர் திருமணத்தில் பங்கேற்று வீடு திரும்பினர். அயப்பாக்கத்தில் தங்கி திருமண மண்டபத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி திருமண மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மணமகன் அறையில் இருந்த கட்டில் அடியில் நகை பெட்டி கிடைத்துள்ளது. அந்தப் பெட்டி சற்று கனமாக இருந்ததால் அதில் நகை இருக்கும் என எண்ணி அதனை மண்டப மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதை அறிந்த மேலாளர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார், மண்டபத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மண்டப பணியாளர் ஜெயமணி, நகைப்பெட்டி எடுத்துக் கொண்டு மேலாளரிடம் கொடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மேலும் சிசிடிவி காட்சியின் உதவியுடன் நகைப்பெட்டியை தவற விட்ட நபர்களை தொடர்பு கொண்டு துணை ஆணையர் அலுவலகம் வரவழைத்து அவர்களிடம் வைரம், தங்கம் நகையை ஒப்படைத்தனர். இதன் மதிப்பு 25 லட்சம் என கூறப்படுகிறது. நகையை பத்திரமாக ஒப்படைத்த மண்டப பணியாளர் ஜெயமணியின் நேர்மையை பாராட்டி ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தி, ஊக்கத்தொகை வழங்கினார்.நகையைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் ஜெயமணியின் நேர்மையை பாராட்டி உணர்ச்சி பொங்க 4 கிராம் தங்க மோதிரத்தை வழங்கினாா். தங்கம் மற்றும் வைர நகைகளை மண்டப பணியாளர் காவல்துறையிடம் ஒப்படைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
