சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT )சார்பில் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பிய பூங்கா 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில் கண்காணிப்பு கோபுரம் பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உடன் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கல்வி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் பூங்காவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
58 ஏக்கர் பரப்பளவில் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தொல்காப்பிய பூங்காவை மேம்படுத்த கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி மூலம் தொல்காப்பிய பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி இரண்டு இணைத்து சாந்தோம் சாலையில் உயர் மட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிஎஸ் தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.



