சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் என்ற பெயரிலான ஒரு நிறுவனம் சேலத்தில் கூட்டம் நடத்துவதாக விளம்பரம் செய்தது அதில் ஹேப்பி ஹோம்ஸ் என்ற பெயரில் இலவச நலத்திட்ட விளக்க உரை வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏராளமானோர் திரண்டனர். கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மத்தியில் ஒரு கும்பல் நிதி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து , அந்தத் திட்டத்தில் சேர்ந்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்ற வகையில் கவர்ச்சிகரமான ஆசை வார்த்தைகளை கூறி , திட்டத்தில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையில், “போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்க முயற்சி செய்யப்பட்டது.

அதாவது 15 ஆண்டுகளுக்கு தினமும் ரூ 10 செலுத்தினால் இறுதியில் 10 லட்சம் தருவதாவும், ரூபாய் பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் என அதிகபட்சம் 50,000 வரை ஒரே தவணையாக ஒருமுறை செலுத்தினால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு திட்டத்தின் கீழ் அனைத்து நலங்களையும் பெறலாம் எனவும், மேலும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், திருமணத்திற்கான நிதி உதவி , மகப்பேறு மற்றும் பிரசவ செலவுகளுக்கான உதவி, துக்க நிகழ்வுகளுக்கான உதவி, இலவச வீடு கட்டி கொடுத்தல், தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை நிதி உதவி, 15 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவித்து மக்களிடம் பணம் வசூலிக்க முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான சென்னையை சேர்ந்த அருண்பால்(42), திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார்(52), சென்னை தண்டையார்பேட்டை சுரேஷ் (41), திருவள்ளூர் கஜேந்திரன் (55), திரகழுக்குன்றம் வேதாச்சலம் (42), ஆகிய ஐந்து பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிடித்து, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூபாய் ஆறு லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த கும்பல் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அடுத்தடுத்து கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்ந்து பெருகி வருகிறது. பொது மக்கள் ஏமாறுவதற்கு முன்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அதிரடியாக இந்த கும்பலை செய்து, நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
காலையில் திருமணம், மாலையில் கொலை? பிண்ணனி என்ன? விசாரணையில் போலீசார்…


