சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவனை உடற்கல்வி ஆசிரியர் இரும்புச் சுத்தியால் அடித்துக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மாணவனின் கை எலும்பு முறிந்து, ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும் இச்சம்பவம் குறித்த விரிவான செய்தி விவரம் வருமாறு:


இரும்புச் சுத்தியால் தாக்கிய ஆசிரியர்!
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன், ஜே.ஜே. நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறான். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவன், மாலையில் கையில் பலத்த வீக்கத்துடனும் கடுமையான வலியுடனும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார், பதற்றத்துடன் விசாரித்த போதுதான் பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. பள்ளியில் நடந்த உடற்பயிற்சி வகுப்பின் போது, அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியர் லெவின் என்பவர், மாணவனை நோக்கி “இங்கு ஏன் நிற்கிறாய்? என் முகத்திலேயே முழிக்காதே!” எனக் கூறி, அங்கிருந்த இரும்புச் சுத்தியால் கையில் ஓங்கி அடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும், மிரட்டலும்!
சுத்தியலால் அடித்ததில் மாணவனுக்குக் கடுமையான கை எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டதோடு, கை எலும்பில் உள் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முறையான முதலுதவி சிகிச்சை அளிக்காமல், வெறும் ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்து அலட்சியமாக இருந்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என உடற்கல்வி ஆசிரியர் லெவின் மாணவனை மிரட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, பள்ளியில் உள்ள சில பெண் ஆசிரியர்களும் இச்சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது எனக் கூறி அந்தச் சிறுவனைப் பயமுறுத்தி, மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் புகார் – ஆசிரியர் அதிரடி கைது!
மகனின் நிலையைக் கண்டு துடித்த தாயார், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தில் மாணவனின் தாயார் முறைப்படி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட ஜே.ஜே. நகர் போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர். பள்ளி மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய பெரம்பூரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் லெவினை (Levin) போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான ஆசிரியரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
