Homeசெய்திகள்சென்னைசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும், மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமன உத்தரவு பிறப்பிக்காமல் காலம் கடத்தி வருவது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

we-r-hiring

​24 நீதிபதி பணியிடங்கள் காலி: அதிகரிக்கும் வேலைப்பளு
​சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மொத்த அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். ஆனால், தற்போது 51 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் ஒரு நீதிபதி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதில் நீதிபதிகளுக்கு கடுமையான வேலைப்பளு ஏற்பட்டுள்ளது.

கொலீஜியம் பரிந்துரையை கிடப்பில் போட்ட மத்திய அரசு
​இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம், 9 மூத்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் 10 உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் என மொத்தம் 19 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்ற கொலீஜியமும் இதனைப் பரிசீலித்து, கடந்த மே 19-ம் தேதியே இந்த 19 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை அனுப்பியது. ஆனால், 50 நாட்களைக் கடந்தும் மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
​ஆர்.சி.பால்கனகராஜ் (தலைவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்) அவர்களின் கருத்து:

“உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 4 வாரங்களுக்குள் மத்திய அரசு நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், மத்திய சட்ட அமைச்சகம் அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளது.”

3.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவை!
​நாடாளுமன்றம் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 3,59,062 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போதிய நீதிபதிகள் இல்லாததால், தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் இறுதி விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
​”தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்” என்பதற்கு ஏற்ப, மத்திய அரசின் இந்தத் தாமதம் வழக்கறிஞர்களையும், நீதிக்காகக் காத்திருக்கும் பொதுமக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட 19 நீதிபதிகளையும் உடனடியாக நியமிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

MUST READ