சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (இன்று) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

4 மணி நேரம் பராமரிப்பு பணி
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகவே 41 மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 10:30 மணிக்குப் பிறகு ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அதற்கு முன்னதாகவே தங்களது பயணங்களை மேற்கொள்ள பொதுமக்கள் திட்டமிட்டனர். இதன் காரணமாக தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் காலை 10:30 மணிக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பயணிகள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்
ரயில் ரத்தால் ஏற்படும் பயணியர் சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விபரம் வருமாறு:
தாம்பரத்திலிருந்து: தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருமால்பூருக்கு காலை 11:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூரில் இருந்து தாம்பரத்திற்கு காலை 9:30 மணி முதல் மதியம் 1:50 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமையான இன்று வெளியூர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிப்போர் இந்த சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
