Homeசெய்திகள்சென்னை"ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!" – உலக மக்கள் தொகை தின...

“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில் உள்ள ஆணாதிக்க மனநிலை மாறி, ஆண்கள் பொறுப்புகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே பெண்கள் அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்கும் நம்பிக்கை வரும்,” என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய விரிவான உரையின் செய்தித் தொகுப்பு பின்வருமாறு:

அருண் ராஜ்

we-r-hiring

​மனித வளம் ஒரு பாரமல்ல!
​விழாவில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், “உலக மக்கள் தொகை தொடர்பாக நமக்கு விழிப்புணர்வு அவசியமாகும். இன்று மக்கள் தொகையை ஒரு பாரமாகப் பார்க்காமல், அது ‘மனித வளம்’ என்ற பார்வை உலகளவில் மாறியிருக்கிறது. நம்மிடம் இருக்கும் மக்கள் தொகையை நாம் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்று சுய பரிசோதனை செய்துகொள்ளவே இந்த விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரோக்கியமான சமூகம் உருவாக வேண்டுமெனில், இளம் வயதுத் திருமணங்களைத் தவிர்த்து, சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும். குழந்தை பிறப்பு என்பது தற்செயலானதாக இல்லாமல், இன்பமான திட்டமிடப்பட்ட நிகழ்வாக இருக்க வேண்டும்,” என்றார்.

​வீட்டுப் பிரசவம் தண்டனைக்குரியது!
​தொடர்ந்து பேசிய அவர், “குறைந்த வயதில் குழந்தை பெற்றெடுத்தால் சிசு மரணம், ரத்த சோகை மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் தனியார் மருத்துவமனை வரை ஒவ்வொரு பிறப்பும் மருத்துவக் கட்டமைப்புக்குக் கீழ்தான் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இக்காலத்தில், வீட்டில் பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய விஷயம் என்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முதல் குழந்தைக்குப் பிறகு போதுமான இடைவெளி மிக அவசியம்,” என்று அறிவுறுத்தினார்.

இளைஞர்களைச் சூழும் போதை அரக்கன்: கனடாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்து?
​நவீன கால இளைஞர்களின் சவால்கள் குறித்துப் பேசிய அமைச்சர், “நிலையான வேலைவாய்ப்பு இருக்குமா என்ற அழுத்தம் இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும், அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. உலகளவில் கனடா மாநிலத்தில் அதிக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகத் தெரியவந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டிலும் தற்போது அந்தச் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனைத் தடுத்து, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே முதலமைச்சரின் முதன்மை லட்சியம். அதற்காக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது,” எனக் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு மற்றும் கல்வி உரிமைக்கான சட்டப் போராட்டம்
​”இளைஞர்களின் கனவை நனவாக்க அடுத்த தேவை தரமான கல்வி. ஆனால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை ‘நீட் தேர்வு’ சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை மாநில அரசு தொடர்ந்து எதிர்த்து, சட்டரீதியான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோருவதால், இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு இளைஞர்களின் கல்வி வாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது. இதற்கும் எதிராக அரசு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது,” என்று கல்வித் துறை சார்ந்த அரசின் நடவடிக்கைகளை விவரித்தார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே தீர்வு!
​மக்கள் தொகை புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் அருண் ராஜ்:
​கருவுறுதல் விகிதம் (Fertility Rate): இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 1.9 ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் அது 1.3 ஆகக் குறைந்துள்ளது. தமிழக மக்கள் தொகை எண்ணிக்கை இதே நிலையில் தொடர வேண்டுமெனில் கருவுறுதல் விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். தற்போது தமிழகக் குடும்பங்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.

முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
தமிழகத்தில் தற்போது 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 14% ஆக உள்ளது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளில் 5-ல் ஒரு பங்காக (20%) அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆணாதிக்க மனநிலைக்குச் சாடல்:
“கர்நாடகா போன்ற மாநிலங்களில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பெற்றோருக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்துச் சிந்தித்து வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஆணாதிக்க மனநிலைதான் பெண்கள் அடுத்த குழந்தை பெற்றெடுப்பதைத் தடுக்கிறது. குழந்தை பிறப்பு தங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என்று பெண்கள் நினைக்கிறார்கள்.

குடும்பப் பிரச்சினைகளையும், வேலைகளையும் ஆண்கள் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டால், பெண்கள் மனம் உவந்து இன்னும் அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்கள். எனவே, தமிழகத்தை ஆணாதிக்க மனநிலையில் இருந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகமாக மாற்றுவதே தற்போதைய அரசின் முதன்மை நகர்வு,” என்று அமைச்சர் அருண் ராஜ் ஆணித்தரமாகக் கூறினார்.

MUST READ