சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் தற்போது மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் தினந்தோறும் கடும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்திற்குள் (அடுத்த மாதம்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரம்மாண்ட பாலம், தற்போதைய சூழலில் திறக்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பைக் கீழே காண்போம்.
சவாலான இந்திய அளவிலான முதல் முயற்சி
கடந்த திமுக ஆட்சியின் போது, 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.621 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4 வழி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இந்தியாவிலேயே, நிலப்பரப்பிற்கு கீழே இயங்கி வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு (Under Ground Metro Tunnel) மேலே கட்டப்படும் முதல் சாலை மேம்பாலம் இதுவாகும். பாலத்தின் தூண்களால் மெட்ரோ சுரங்கப்பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சர்வதேசத் தரத்தில் சவாலான வடிவமைப்புடன் இப்பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன.
7 முக்கிய சந்திப்புகளைக் கடக்கும் பாலம்
அண்ணா சாலையின் மிக முக்கிய சந்திப்புகளான:

- எல்டாம்ஸ் சாலை சந்திப்பு
- SIET கல்லூரி சாலை சந்திப்பு
- செனடாப் சாலை சந்திப்பு
- நந்தனம் சந்திப்பு
- CIT நகர் 3-வது மற்றும் 1-வது பிரதான சாலை சந்திப்பு
- சைதாப்பேட்டை தாடண்டர் நகர்
- ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 பிரதான சந்திப்புகளைத் தடையின்றி கடக்கும் வகையில் இந்த உயர்மட்ட பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முடங்கிப் போன பணிகள்: காரணம் என்ன?
பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே பாலத்திற்கான தூண்கள் மற்றும் பெரும்பான்மையான கட்டுமானப் பணிகள் அதிவேகமாக முடிவடைந்தன. ஒரு சில இடங்களில் மட்டுமே பணிகள் பாக்கியிருந்தன. எப்படியும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பாலத்தைத் திறந்துவிட வேண்டும் என்ற இலக்கோடு பணிகள் நடந்தன. ஆனால், தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைந்துள்ள தற்போதைய சூழலில், கடந்த சில வாரங்களாக இப்பணிகள் ஆமை வேகத்தில் நகர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாததால், அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வேலைகள் நடக்கின்றன.
அரை மணி நேரப் போக்குவரத்து நரகத்தில் வாகன ஓட்டிகள்!
சென்னையில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது. இதில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான 3.50 கி.மீ தூரத்தைக் கடக்கவே, காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. பாலப் பணிகளுக்காகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் நெரிசல் இரட்டிப்பாகியுள்ளது. ஜவ்வாக இழுக்கும் இப்பணிகளால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளின் ஆதங்கம்
“இது கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் தற்போதைய அரசு இதில் சுணக்கம் காட்டக் கூடாது. அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
