Homeசெய்திகள்சென்னைமின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

-

- Advertisement -

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொழில்நுட்பப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது.
நிரந்தரத் தீர்வு

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத் தலைமை அலுவலகத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

we-r-hiring

ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கவுரை:
​ஒப்பந்தம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில்:
​”தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி (Solar) மின் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. அதனைச் சரியான முறையில் சேமித்து, மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அதிநவீன வழிமுறைகளை இந்த ஒப்பந்தம் மூலம் அரசுக்கு வழங்கவுள்ளோம்.
​இதுதவிர, ஹைட்ரஜன் மற்றும் பயோகேஸ் (Biogas) உள்ளிட்ட அடுத்தகட்ட எரிசக்தி ஆற்றல்கள் குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மின்சாரத் துறையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் (Cyber Crimes) இருந்து மின்வாரியக் கட்டமைப்பை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

சர்வதேசத் தொழில்நுட்பக் குழு – அமைச்சர் நிர்மல் குமார் உரை:
​விழா மேடையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “மின்சார வாரியத்தின் ஒவ்வொரு நகர்வையும் அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கொள்கைகளை வகுக்கவும், புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தவும் ஒரு நிபுணர் குழு தேவை. அதற்கான முதற்கட்டப் புள்ளிதான் இந்த ஐஐடி ஒப்பந்தம். மின்வாரியத்தின் மூத்த பொறியாளர்களும், ஐஐடி குழுவினரும் இணைந்து இதில் பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அளித்த அதிரடி விளக்கங்கள்:

​1. மின்வெட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?
​தமிழகத்தில் பரவலாக இருக்கும் மின்வெட்டுப் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்ததாவது:
“எதனால் மின்தட்டுப்பாடு ஏற்படுகிறது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். ஆங்காங்கே இருக்கும் குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறோம். டிரான்ஸ்பார்மர் பழுதா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பதை ஆராய்ந்து வருகிறோம். உதாரணமாக, பாலவாக்கத்தில் ஏற்பட்ட நீண்ட நேர மின்வெட்டு உடனடியாகச் சரிசெய்யப்பட்டது.
​தற்போது மேனுவலாக (Manual), அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் சரிசெய்து வருகிறோம். ஆனால், ஒட்டுமொத்த மின்கட்டமைப்பையும் முழுமையாக மேம்படுத்தினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். அதற்குச் சற்று சில காலங்கள் எடுக்கும். அதுவரை நிர்வாகச் செலவுகளை ஏற்றுப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்வோம்.”

​2. 20,000 புதிய பணியாளர்கள் நியமனம்!
​மின்வாரியப் பணியிடங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், “மின்சாரத் துறைக்குத் தேவையான பணியாளர்கள் கண்டிப்பாக டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுகள் வழியாக மட்டுமே வெளிப்படைத்தன்மையுடன் எடுக்கப்படுவார்கள். இந்த வருடத்திற்குள் 15,000 புதிய பணியாளர்களும், 5,000 பழைய கேங்மேன்களும் (Gangmen) என மொத்தம் 20,000 நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர். அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்குள் இந்த நியமனப் பணிகள் விரைவாக முடிவடையும். அதுவரை தற்காலிகமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துப் பணிகள் சீரமைக்கப்படும்” என்றார்.

3. ஸ்மார்ட் மீட்டர் மற்றும் வெள்ளை அறிக்கை நடவடிக்கை:
​ஸ்மார்ட் மீட்டர்: “ஸ்மார்ட் மீட்டர் (Smart Meter) திட்டம் தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. தொழில்நுட்ப ரீதியாக நாம் இன்னும் அதில் முழுமையாக உறுதியாக இல்லை; அது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.”
​ஊழல் மீது நடவடிக்கை: “மின்வாரிய வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல முறைகேடுகள் ஏதேனும் நடந்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்” என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

MUST READ