தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (07-07-2026) பிரம்மாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாகப் பங்கேற்று, த.வெ.க அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

”வாக்குறுதி அல்ல… உத்தரவாதம் என்றார் விஜய்” – ஈசன் முருகசாமி சாடல்
பேரணியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாய சங்கத் தலைவர் முருகேசன் ஆகியோர் த.வெ.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது, ”தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். மேலும், இது வெறும் ‘வாக்குறுதி அல்ல, விவசாயிகளுக்கு நான் தரும் உத்தரவாதம்’ என்றும் கூறினார். இதனை நம்பிதான் ஒட்டுமொத்த விவசாயிகளும் த.வெ.க-விற்கு வாக்களித்தனர். தேர்தல் களத்தில் தீய சக்திகளை விஜய் ‘வெச்சு செய்வார்’ என்று பார்த்தால், தற்போது அவர் விவசாயிகளை ‘வெச்சு செய்து’ வருகிறார். கூட்டுறவு பயிர்க் கடன்களை ரத்து செய்யாததால், ₹50,000, ₹75,000 எனச் சிறு தொகைக் கடன்களுக்காக விவசாயிகளின் நகைகளை ஏலம் விடப்போவதாக அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள். கடன் செலுத்தாத விவசாயிகளின் நகைகள் ஏலம் விடப்படும் என்ற அதிகாரிகளின் இந்த மிரட்டல் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் இரு விவசாயிகள் தற்கொலை
தமிழ்நாட்டில் உரிய முறையில் கடன் தள்ளுபடி கிடைக்காமலும், விளைவித்த பயிர்களுக்குச் சரியான விலை கிடைக்காமலும் நாள்தோறும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. த.வெ.க அரசு தனது உத்தரவாதங்களை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், கடன் சுமையால் நாளொன்றுக்கு 10 விவசாயிகள் வரை தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை ஏற்படும்.
இப்போராட்டத்தின் போது அமைச்சர்கள் நேரில் வந்து எங்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுச் சென்றார்களே தவிர, இதுவரை எந்தவொரு பரிசீலனையும் செய்யவில்லை. புதிய அரசு விவசாயக் கடன்களை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், அடுத்தடுத்து மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.”
இவ்வாறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். இப்போராட்டத்தால் சென்னை புதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
