இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 5-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-ஆவது பெரிய விமான நிலையமாகத் திகழ்ந்த சென்னை, சமீபத்திய ஆண்டுகளில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களின் அசுர வளர்ச்சியால் தற்போது தனது இடத்தைப் பறிகொடுத்துள்ளது.


தரவரிசையில் சென்னைக்கு 5-வது இடம்:இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ள மே 2026-க்கான சமீபத்திய போக்குவரத்து புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் சிறந்த விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் இதோ:1.டெல்லி 2.மும்பை 3.பெங்களூரு 4.ஹைதராபாத் 5.சென்னை
5-ஆவது இடத்திற்கும் ஆபத்து? கொல்கத்தா கொடுக்கும் பலத்த போட்டி!
தற்போது 5-ஆம் இடத்தில் இருக்கும் சென்னை விமான நிலையத்திற்கு, கொல்கத்தா விமான நிலையம் மிக நெருக்கமான பயணிகள் எண்ணிக்கையுடன் பலத்த போட்டியை அளித்து வருகிறது. இதனால் சென்னை ஏர்போர்ட் விரைவில் தனது 5-ஆவது இடத்தையும் இழக்கும் அபாயத்தில் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
பயணிகள் எண்ணிக்கை (மே 2026): சென்னை ஏர்போர்ட் சுமார் 1.90 மில்லியன் பயணிகளைக் கையாண்ட நிலையில், கொல்கத்தா ஏர்போர்ட் 1.87 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 34,000 பயணிகள் மட்டுமே!
விமான இயக்கங்கள் (Aircraft Movements): சென்னை 13,025 விமான இயக்கங்களைப் பதிவு செய்ய, கொல்கத்தா 12,080 இயக்கங்களைப் பதிவு செய்துள்ளது. இதிலும் வித்தியாசம் வெறும் 945 மட்டுமே ஆகும்.
சரிவுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சென்னை விமான நிலையத்தின் இந்தத் தொடர் சரிவு நிலைக்குப் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் சேவைப் பிரச்சினைகளே காரணம் எனத் துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்:
ஓடுதள பற்றாக்குறை: விமான நிலையத்தின் குறுக்கிடும் ஓடுபாதை அமைப்பால் (Intersecting Runways) அதன் கொள்ளளவு (Capacity) பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
சேவைகள் ரத்து: முக்கிய விமான நிறுவனங்கள் பல, தங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடச் சேவைகளைச் சென்னையிலிருந்து திடீரென நிறுத்தியது.
பயணிகளுக்கான வசதிகள்: உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள் மற்றும் போதிய பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை.
பெங்களூரு, ஹைதராபாத் போன்ற அண்டை மாநில ஏர்போர்ட்டுகள் அதிநவீன உள்கட்டமைப்புடன் பயணிகளைக் கவர்ந்து வரும் வேளையில், சென்னை ஏர்போர்ட் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
