தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கோரப்பட்ட ஒரு டெண்டரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. தங்களுக்கு சாதகமான ஒரு குறிப்பிட்ட நபருக்கு டெண்டரை ஒதுக்கவே இந்த அப்பட்டமான ‘செட்டிங்’ வேலை நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விரிவான பின்னணி வருமாறு:

டெண்டர் விதிமுறைகள் என்ன சொல்கிறது?
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் அரசுப் பணிகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க ‘இ-டெண்டர்’ (E-Tender) முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகளின்படி:
ரூ.2 கோடிக்கு குறைவான மதிப்புள்ள டெண்டர்களை ஒப்பந்ததாரர்கள் படித்துப் பார்த்துச் சமர்ப்பிக்கக் குறைந்தது 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ரூ.2 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பெரிய டெண்டர்களுக்குக் குறைந்தது 30 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். பணிகளின் அவசரத் தன்மையைப் பொறுத்து சில நேரங்களில் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை அவகாசம் சுருக்கப்படுவது வழக்கம். ஆனால், வரலாற்றிலேயே இல்லாத படி வெறும் ’30 நிமிடங்கள்’ மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
குமரி மாவட்டத்தில் நடந்த கூத்து!
கன்னியாகுமரி மாவட்டம், கருந்தங்கோடு ஊராட்சியில் (பஞ்சாயத்து) சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு அரசுப் பணிக்கான இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், வரும் ஜூலை 13-ஆம் தேதி மதியம் 3:00 மணி முதல் 3:30 மணி வரை மட்டுமே டெண்டரை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என்றும், சரியாக 3:30 மணிக்கு டெண்டர் பெட்டி திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்ததாரர்கள் டெண்டர் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தொகையைக் கணக்கிட்டு, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
‘செட்டிங்’ விவகாரமும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையும்:
வழக்கமான தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்கள் யாரும் இந்த 30 நிமிடத்திற்குள் விண்ணப்பிக்கக் கூடாது என்பதற்காகவும், தங்களுக்கு வேண்டிய ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே இந்த ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதிகாரிகளும், சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் இணைந்து இந்த ‘செட்டிங்’ முறைகேட்டைச் செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் சங்கம் கண்டனம்:
“30 நிமிடத்தில் எப்படி ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும்? இது டெண்டர் விதிகளையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். எனவே, இந்த சர்ச்சைக்குரிய டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி, 2 கோடிக்கு குறைவான இந்த டெண்டருக்கு முறைப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கி மறுடெண்டர் விட வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
