அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் பள்ளி மாணவியிடம் அராஜகப் போக்குடன் கேள்வி கேட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கும், இதனைத் தட்டிகேட்காமல் மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள காரசாரமான செய்தி அறிக்கை வருமாறு:


”ரீல்ஸ் வெறியா? மேதாவித்தனமா?”
”தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, அங்குப் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜகப் போக்குடன் கேள்வி கேட்டதோடு, அங்கிருந்த ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடத்தியுள்ளார். தங்களின் ‘ரீல்ஸ்’ வெறியைத் தீர்த்துக் கொள்ளப் பிஞ்சுப் பள்ளி குழந்தைகளை இரையாக்குவதா? தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, அரசுப் பள்ளியில் படித்து எப்படியாவது முன்னேறிட வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளிடம், தங்களது மேதாவித்தனத்தைக் காட்ட நினைப்பது தமிழ் சமுதாயத்திற்கே நல்லதல்ல.
ஏற்கனவே, தவெக அரசின் மற்றொரு அமைச்சர் விஸ்வநாதன் அரசுப் பள்ளி ஒன்றில் குத்தாட்டம் போட்டுப் பள்ளியின் மாண்பைச் சீர்குலைத்தார். தற்போது அமைச்சர் கீர்த்தனாவோ, ஒரு குழந்தையைக் கேள்விகள் மூலம் கூனிக் குறுக வைத்து, அந்த வீடியோவை இணையத்தில் பரப்பி மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.”
குழந்தைகளைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளும் பிற்போக்குத்தனம்:
அமைச்சரின் செயல்பாடுகளைச் சாடி கீதா ஜீவன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“எந்தக் குழந்தைக்குத்தான் பதற்றம் வராது?”
“ஓர் அரசுப் பள்ளிக்கு அமைச்சரோ, மாவட்ட ஆட்சியரோ வருகிறார்கள் எனில் இயல்பாகவே குழந்தைகளுக்குப் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அந்தச் சூழலில் கேமராவையும் மைக்கையும் தூக்கிக் கொண்டு, அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான கும்பல் தடபுடலாகக் கேள்வி கேட்டால் எந்தக் குழந்தைக்குத்தான் பதற்றம் வராது? அந்த நிலையை உணராமல், ‘லாஸ்ட் பெஞ்ச் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்’ என்கிற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களைப் பேசி, குழந்தைகளைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளியுள்ளார் அமைச்சர்.”
சட்டப்படி குற்றம் – முதலமைச்சர் விஜய் மெளனம் காப்பது ஏன்?
”அமைச்சரின் சுய விளம்பரப் பெருமைக்காக ஒரு மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் ரீல்ஸ் தேவையா? குழந்தைகளின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ அவர்களின் அனுமதியின்றிப் பொதுத்தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பது கூட ஓர் அமைச்சருக்குத் தெரியாதா? ஒரு குழந்தையிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாதவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.
எந்தக் குழந்தைகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்களோ, அந்தப் பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சைச் விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கியுள்ளது. இப்படித் தறிக்கெட்டுச் செல்லும் அமைச்சர்களை நல்வழிப்படுத்த வேண்டிய முதலமைச்சர் விஜய், கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?” எனப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசுடன் ஒப்பீடு:
அரசுப் பள்ளிகளுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாகவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்தது நமது முந்தைய தி.மு.க அரசு தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இன்று குழந்தைகளை அரசிடமிருந்தும், அமைச்சர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய மோசமான சூழலில் தமிழ்நாடு சிக்கியிருப்பது பெரும் மன வேதனையைத் தருகிறது எனத் தெரிவித்துள்ளார். “இப்படிப்பட்ட மந்திரிகளை வைத்துக் கொண்டு பேசாமுதல்வர் எத்தனை காலத்திற்குப் பொழுதுபோக்கப் போகிறார் என்று தெரியவில்லை” என்றும் கீதா ஜீவன் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.
