தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ‘ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்’ (Repeat Tripping Elimination Programme – RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவரும், மேலாண்மை இயக்குநருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அனைத்து மின்வாரிய தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விரிவான விபரம் வருமாறு, தமிழகம் முழுவதும் தற்போது 3.5 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோருக்குப் பெரும்பாலும் தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள் (Sub-stations), மின் வழித்தடங்கள் மற்றும் மின் வலையமைப்புகளில் (Power Grid) மட்டும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, மின் தடை ஏற்படுவதற்கான மூல காரணத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதே இந்த ‘RTEP’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவுகள்
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் எந்தெந்த துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களில் அதிகளவில் மின் தடை ஏற்பட்டுள்ளதோ, அந்தப் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றுக்கெனத் தனிப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். மின் தடை ஏற்படும் போது வெறும் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளை மட்டும் செய்யாமல், அந்தப் பாதிப்பு ஏன் ஏற்பட்டது என்பதற்கான ‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ (Root Cause Analysis) எனப்படும் மூல காரணத்தை ஆராய்ந்து, நிரந்தரப் பொறியியல் தீர்வுகளைச் (Engineering Solutions) செயல்படுத்த வேண்டும். மின் தடைப் பிரச்சினைகளை ஆய்வு செய்ய மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம், பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில் மின் உபகரண உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெறலாம். இதற்காக மாநில அளவிலான நிபுணர் குழு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) குழுவும் இணைந்து செயல்படும். மாநிலத்தில் 85 சதவீதத்திற்கும் மேல் பணிகள் நிறைவடைந்து, இறுதித் கட்டத்தில் உள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்புப் பணிகளை விரைவாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வாரந்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார். புதிய துணை மின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், மின் வலையமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைகள் முற்றிலுமாகக் குறையும் என மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மின்வாரியத் தலைவரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையேயும் மின் நுகர்வோரிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாநில தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய தவெக அரசு அழுத்தம்? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்!
