பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ‘Anywhere Registration’ முறையின் கீழ் ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி அமலுக்கு வரவுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விவரித்த புதிய திட்டங்கள் வருமாறு,

நள்ளிரவிலும் பத்திரப்பதிவு – பில்டர்களுக்கு தனி ஐடி
”பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கப் பதிவுத்துறையில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக, வரும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல்முறை நிலப்பதிவு செய்பவர்கள், புதிய வீட்டுமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குபவர்கள் தங்களது பதிவுகளை முழுமையாக ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம். இதற்காகப் பில்டர்களுக்கு (Builders) பிரத்யேக லாகின் ஐடி (Login ID) வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நள்ளிரவிலும் கூட தங்களின் இருப்பிடத்திலிருந்தே பத்திரப்பதிவு நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்.
வீடே சார்பதிவாளர் அலுவலகம் – ஒரே நாளில் ஆவணம்
இத்திட்டத்தைப் பயன்படுத்த விரும்புவோர் கைரேகை சாதனம் (Fingerprint Device) மற்றும் விழித்திரை ஸ்கேனர் (Iris Scanner) போன்ற எளிய கருவிகளைத் தங்களின் இருப்பிடத்திலேயே வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்தான் ஆவணப் பதிவை மேற்கொள்கிறாரா என்பது பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்பட்டு, ஒரே நாளில் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை உடனடியாக 30 சதவீதம் வரை குறையும். எஞ்சிய 70 சதவீத பதிவுகளையும் படிப்படியாக ஆன்லைனுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பத்திரப்பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல்
தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை, பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் பலனாக, இனி பத்திரப்பதிவு செய்த உடனே ‘ஆட்டோ மியூட்டேஷன்’ (Auto Mutation) தொழில்நுட்ப முறையில், தானாகவே பட்டா மாறுதல் (Name Transfer) செய்யப்பட்டு, அதனை இணையத்திலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
லஞ்சத்தை ஒழிக்க டோல்-ப்ரீ எண்
பதிவுத்துறையில் ‘லஞ்சம்’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்பதில் தவெக அரசு தீவிரமாக உள்ளது. காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக நான் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்கள் யாரும் லஞ்சப் புகார்களைத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், துறையில் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்கத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக அதிகாரிகளை அணுக வேண்டுமே தவிர, இடைத்தரகர்களை நம்பி ஏமாறக் கூடாது. பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண, விரைவில் ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) அறிமுகப்படுத்தப்படும். அதன் மூலம் ஐ.ஜி, துறைச் செயலாளர் அல்லது நேரடியாக அமைச்சராகிய எனது கவனத்திற்குப் புகார்களைக் கொண்டு வரலாம். கடந்த காலங்களில் நில வழிகாட்டி மதிப்பை (Guideline Value) குறைத்துக் காட்டி முறைகேடாகப் பதிவு செய்த சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் பதிவுத்துறைக்கு ₹31,000 கோடி வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
