தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று 3-வது நாளாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
திமுகவினருடன் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணனிடம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தன்னை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அவர் கூறுவது அபாண்டமானது. யாரிடமாவது அவர் ஒரு 300 ரூபாய் கேட்டிருப்பார், அதை அவர்கள் கொடுக்க மறுத்ததால் அந்தச் சம்பவம் நடந்திருக்கலாம்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
ரூ. 50 கோடி பேரமா?
தொடர்ந்து செய்தியாளர்கள், “உங்களுடைய ஆதரவாளர் ஒருவர் அவரிடம் பேரம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளதே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அவர் என் ஆதரவாளரா?” என்று எதிர்கேள்வி எழுப்பிய அனிதா ராதாகிருஷ்ணன், “அவரிடம் 50 கோடி ரூபாய் டிமாண்ட் செய்யப்படுவதாகக் கூறுகிறார்களே, முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கும் என்று அவருக்குத் தெரியுமா? நீங்கள் வேண்டுமானாலும் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள்” என நகைச்சுவையாகப் பேசினார். மேலும், “அவர் கூறும் அனைத்து தகவல்களும் முற்றிலும் தவறானவை. நான் ஒன்றும் லாட்டரி வியாபாரமோ, கஞ்சா வியாபாரமோ செய்யவில்லை. யாரையும் அனுப்பி யாரையும் மானபங்கப்படுத்தவும் இல்லை. அவர் சொல்வதெல்லாம் தவறான செயல்கள்” என்று மறுப்பு தெரிவித்தார். ”தொடர்ச்சியாக தவெக தரப்பில் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறதே?” என்ற கேள்விக்கு, “பழுத்த மரம்தான் கல்லடி படும்” என்று பழமொழியைக் கூறி அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம்; ஆனால் தரத்தில் பின்தங்கியுள்ளோம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் கவலை

