
எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் ஒரு கண்கொள்ளாக் இயற்கை விசித்திரம் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கன் கல்லூரியில், ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல்லாயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் (பட்டாம்பூச்சிகள்) வந்து குவிவது வழக்கம்.

இந்த ஆண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து லட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் தங்களது நீண்ட தூர இடப்பெயர்வைத் (Migration) தொடங்கியுள்ள நிலையில், மதுரைக் கல்லூரி வளாகம் வண்ணமயமான பூச்சிகளின் புகலிடமாக மாறியுள்ளது.
கல்லூரிச் சோலையும் ‘திவி திவி’ மரங்களும்:
இந்த இயற்கை இடப்பெயர்வு மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் வருகை குறித்து அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் ஜாய் சர்மிளா பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள்: “1881-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி வளாகம், அடர்ந்த மரங்களுடன் ஒரு சோலை வனம் போலவே காட்சியளிக்கும். இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் பிரம்மாண்ட மரங்களுக்கு நடுவேதான் அமைந்துள்ளன.
கல்லூரியில் ‘திவி திவி’ (Divi-divi) எனப்படும் மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களில் உள்ள தேனை உறிஞ்சுவதற்காகவே வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இங்கு வருகின்றன. இதற்கெனக் கல்லூரியில் தனியே வண்ணத்துப் பூச்சித் தோட்டம் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.”

இந்த ஆண்டு 20,000 பூச்சிகள் வருகை – புதிய ஆய்வு:
”கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கல்லூரியில் வண்ணத்துப் பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் தேடுதல் தொடங்கப்பட்டது. இதுவரை இங்கு 45-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்கள் (Species) கண்டறியப்பட்டுள்ளன.
வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இடம்பெயர்ந்து வரும் இவை, சில நாட்கள் கல்லூரியில் தங்கிவிட்டுப் பிறகு தங்களது பயணத்தைத் தொடர்கின்றன. இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக அதிக அளவில், அதாவது சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் வந்து சென்றுள்ளன.
இங்கு ‘டார்க் ப்ளூ டைகர்’ (Dark Blue Tiger) மற்றும் ‘காமன் இந்தியன் க்ரோ’ (Common Indian Crow) போன்ற அரிதான வண்ணத்துப் பூச்சி வகைகள் அதிகளவில் வந்துள்ளன. இந்த ஆண்டு இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பூச்சிகள் வந்ததற்கான காரணம் குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளோம். மதுரையில் இந்த அதிசயத்தை இந்தக் கல்லூரி வளாகத்தைத் தவிர்த்து அழகர் கோவிலிலும் நாம் காண முடியும்” என ஜாய் சர்மிளா தெரிவித்தார்.
பசுமையைக் காட்டும் ‘உயிரினக் காட்டி’ (Bio-indicator):
வண்ணத்துப் பூச்சிகள் ஆராய்ச்சி மாணவி அர்ச்சனா இதுகுறித்துக் கூறுகையில்:
”ஜூன், ஜூலை மாதங்கள் என்பது வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வு காலமாகும். கேரளாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் சமயத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இவை கூட்டம் கூட்டமாகக் கிளம்புகின்றன. அப்படி இடம்பெயரும் பூச்சிகளுக்கு, இந்தக் கல்லூரி வளாகத்தில் தடையின்றித் தேன் கிடைப்பதால், அவை இங்கு அமர்ந்து இளைப்பாறிவிட்டுத் தங்களது பயணத்தைத் தொடர்கின்றன.
வண்ணத்துப் பூச்சிகள் என்பவை ஒரு சிறந்த ‘உயிரினக் காட்டி’ (Bio-indicator) ஆகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாகக் கூடுகின்றன என்றால், அந்த இடம் மாசற்ற தூய்மையான காற்றோடும், அதிக பசுமையோடும் இருக்கிறது என்று அர்த்தம். பரபரப்பான மதுரை நகரின் நடுவே, நமது கல்லூரி வளாகம் இன்னும் தூய்மையான சுற்றுச்சூழலோடு இருப்பதைத்தான் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் வருகை பறைசாற்றுகிறது.”
இயற்கையின் முக்கியச் சங்கிலி:
காடுகளின் வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கும் அடிப்படையான மகரந்தச் சேர்க்கை (Pollination) மற்றும் உணவுச் சங்கிலியில் (Food Chain) வண்ணத்துப் பூச்சிகளின் பங்கு மிக முக்கியமானது. பரபரப்பான கான்கிரீட் காடுகளுக்கு நடுவே, பல்லாயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சி, மதுரை மக்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது.
