“மற்ற மாநிலங்களில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இருக்கும்போது தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?” என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ‘ரேபிடோ’ (Rapido), ‘ஓலா’ (Ola), ‘உபர்’ (Uber) போன்ற செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகளை முறைப்படுத்தவும், அதற்கு முறையான உரிமம் வழங்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு உள்ள தயக்கம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பு வாதம்:
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போதைய போக்குவரத்து சூழலில் பைக் டாக்ஸிகள் என்பது கடைசி மைல் இணைப்புக்கு (Last-mile connectivity) இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை எளிய மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய பகுதிநேர/முழுநேர வாழ்வாதாரமாக உள்ளது.
பைக் டாக்ஸி நிறுவனங்கள் எவ்வித தடையுமின்றி செயலிகள் மூலம் தங்களது சேவையைத் தொடர்கின்றன. ஆனால், அதற்கான முறையான சட்ட விதிகளோ, உரிமங்களோ (Permits) இல்லாததால், போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் அப்பாவி பைக் ஓட்டுநர்களைப் பிடித்து அபராதம் விதிப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிகின்றனர்.
எனவே, மத்திய அரசின் ‘மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள்’ (Motor Vehicle Aggregator Guidelines)-இன் படி பைக் டாக்ஸிகளுக்கு முறையான உரிமம் வழங்கத் தனி திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்” என்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்றத்தின் கேள்விகளும் அரசின் பதில்களும்:
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் மத்திய அரசுக்குச் சில முக்கியக் கேள்விகளை எழுப்பினர்:
அதன்படி, “இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான அனுமதியும், உரிமங்களும் வழங்கப்பட்டுச் சட்டப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம் உள்ளது?”
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், பைக் டாக்ஸிகளை முறைப்படுத்துவது மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க ஒரு ‘நிபுணர் குழு’ அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, சாலை நெரிசல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு:
மத்திய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019-ன் படி, இருசக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக (Transport Vehicles) பதிவு செய்ய சட்டத்தில் இடமுள்ளதா? என்பது குறித்தும், பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்த விரிவான விதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
