தமிழ்நாடு அரசின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை”யின் பெயரை, இனி “சமூக நீதித்துறை” என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.

அரசு கோப்புகளில் உடனடி மாற்றம்:
தமிழ்நாடு அரசின் இந்தத் பெயர் மாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்து அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளிலும் புதிய பெயரையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப, தமிழ்நாடு வணிக விதிகள் (Tamil Nadu Business Rules) மற்றும் தலைமைச் செயலக அறிவுரைகளில் (Secretariat Instructions) தேவையான திருத்தங்களை மேற்கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் அரசு சார்ந்த அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளிலும் “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை” என்பது “சமூக நீதித்துறை” என்றே குறிப்பிடப்படும்.
புதிய அமைச்சரின் கீழ் செயல்பாடுகள்:
அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள் மற்றும் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் இந்த சமூக நீதித்துறை அமைச்சராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் இத்துறைக்கு, “சமூக நீதித்துறை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் தளத்திலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது
