அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து விலகி வரும் இக்கட்டான சூழ்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) முக்கியக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பின்பாக அதிமுக தொடர்ந்து சில சவால்களைச் சந்தித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிமுகவின் எம்எல்ஏக்கள் பலம் 41-ஆக குறைந்துள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எனப் பலரும் கட்சியை விட்டு விலகி வருவது கட்சிக்குப் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கட்சியை மீட்டெடுப்பது மற்றும் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆலோசனை கூட்டத்தில் எழுந்த கோரிக்கை
தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அவர் மீண்டும் இணைந்தால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் பலம்பெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கும்பகோணம் பகுதி செயலாளர் பத்ம குமரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆய்வுக் கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தை ஏற்று, டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என்று இபிஎஸ்ஸிடம் கூறினேன். அதற்கு அவர், ‘டிடிவி தினகரன் வேறொரு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று எந்தவொரு கோபமும் இல்லாமல் சாதாரணமாகப் பதிலளித்தார்.
அனைவரின் கருத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டார். பிரிந்திருக்கும் நாம் ஒன்று சேர்ந்தால் கட்சி வலுப்பெறும். உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆகியோருக்கு உடனுக்குடன் அரசியல் ரீதியாகக் ‘கவுண்டர்’ கொடுக்கும் ஆற்றல் டிடிவி தினகரனுக்கு உண்டு. அவரும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட்டால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்படும்; மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதே கீழ்மட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பம். செய்தியாளர்கள் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரையும் இணைக்கக் கோரிக்கை விடுத்தீர்களா எனக் கேட்டதற்கு, “அவர்கள் எல்லாம் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள், தற்போது அனைவரும் டிடிவி தினகரனை மட்டும்தான் சொல்கிறார்கள்” என்று பத்ம குமரேசன் தெளிவுபடுத்தினார்.
டிடிவி தினகரனின் நிலைப்பாடு என்ன?
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்த விவகாரம் வலுத்துள்ள நிலையில், டிடிவி தினகரனும், “நாங்கள் அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்போம்; இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை விட்டு விலக மாட்டோம்” என உறுதியளித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பி வர வேண்டும் என்றும், அவர்களுக்காக இபிஎஸ்ஸிடம் பேசுவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தது இந்தத் தருணத்தில் குறிப்பிடத்தக்கது.
