Homeசெய்திகள்சென்னை"உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!" - சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும்...

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

-

- Advertisement -

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர் வைப்பது தொடர்பாக, சூர்யா ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக பேனர் வைக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

சூர்யா

we-r-hiring

சூர்யா பிறந்தநாள் ரத்ததான முகாம்
​நடிகர் சூர்யா வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதனையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் மற்றும் இளைஞரணி சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று பிரம்மாண்ட ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கி வந்தனர்.

முட்டுக்கட்டை போட்ட காவல்துறை
​ரத்ததான முகாம் நடைபெறும் மருத்துவமனை வளாகத்தில், நடிகர் சூர்யாவின் புகைப்படத்துடன் கூடிய ரத்ததான விழிப்புணர்வு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த காவல்துறையினர், “முறையான அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டுள்ளது, எனவே இதனை உடனே அகற்ற வேண்டும்” என்று கூறி முட்டுக்கட்டை போட்டனர்.

ஆவேசமடைந்த ரசிகர்கள்: “விஜய் அரசு செக் வைக்கிறதா?”
​போலீசாரின் இந்த அதிரடி உத்தரவால் சூர்யா ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். “நாங்கள் முறையான அனுமதியோடுதான் இந்த ரத்ததான முகாமையே நடத்தி வருகிறோம். நல்ல காரியம் செய்யும்போது ஏன் தடுக்கிறீர்கள்? யார் சொல்லி இதனைச் செய்கிறீர்கள்? உங்கள் முதலமைச்சரும் (விஜய்) ஒரு நடிகர் தான், எங்கள் அண்ணன் சூர்யாவும் ஒரு நடிகர் தான்!” என்று கூறி போலீசாருடன் அனல் பறக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் எங்கு ஒரு நல்ல காரியம் நடந்தாலும், அங்கு வந்து அனுமதி கேட்டு குடைந்து, நற்காரியங்கள் செய்பவர்களை மனதளவில் நோகடிப்பதே போலீசாரின் வழக்கமாகிவிட்டது என்று ரசிகர்கள் அங்கு திரண்டு முழக்கமிட்டனர்.

அரை மணி நேர பரபரப்பு – இறுதியில் அனுமதி
​போலீசாருக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையே சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த காரசாரமான வாக்குவாதம் நீடித்ததால், மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ரசிகர்களின் தொடர் எதிர்ப்பையும், ரத்ததான முகாம் என்ற நற்காரியத்தையும் கருத்தில் கொண்டு, இறுதியில் சூர்யாவின் பேனரைத் தொடர்ந்து வைத்திருக்க காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அதன் பின்னரே நிலைமை சுமுகமானது.

​விஜய் தலைமையிலான புதிய அரசு, நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு மறைமுகமாக செக் வைக்க முயல்கிறதோ என்ற விவாதத்தை இந்தச் சம்பவம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.

MUST READ