Homeசெய்திகள்சென்னைரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

-

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு வருகை தந்தார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு தொகுதிக்கு வந்த அவருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கம்போல் மூடிய காரில் வராமல், திறந்த வாகனத்தில் மக்களுக்குக் கையாட்டியபடி அவர் தொகுதிக்குள் நுழைந்தார்.

விஜய்

we-r-hiring

நவீன வசதிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு:

பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்காக, வியாசர்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைச் சீரமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஒரு மாதமாகப் புதுப்பிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தை இன்று அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க ஏதுவாக இருக்கை வசதிகள் மற்றும் 2 பிரத்யேக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த முதல்வர், அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு இ-சேவை மையத்தையும் திறந்து வைத்து, ஊழியர்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்.

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு – தன் கையால் பொருட்கள் வழங்கிய விஜய்:

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து அருகில் உள்ள ஷர்மா நகர் ரேஷன் கடைக்கு முதல்வர் விஜய் நடந்தே சென்றார். வழியெங்கும் மக்கள் அவருக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். ரேஷன் கடைக்குச் சென்ற முதல்வர், அங்குள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கிருந்த குடும்ப அட்டைதாரர்களுக்குத் தனது சொந்தக் கையாலேயே அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வழங்கினார். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

73 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்!

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருந்தவர்களில், முதற்கட்டமாக இன்று 50 பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை முதல்வர் விஜய் வழங்கினார். மேலும், இந்த மாத இறுதிக்குள் தகுதியுள்ள 73,000 பேருக்குப் புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் முழுமையாக வழங்கப்படும் என்ற அதிரடி தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அலுவலகத் திறப்பு மற்றும் ரேஷன் கார்டு விநியோகத்திற்குப் பிறகு, பெரம்பூர் தொகுதி மக்களைச் சந்திப்பதற்காகப் பேட்டரி வாகனம் மூலம் முதல்வர் விஜய் புறப்பட்டுச் சென்றார். இதனால் பெரம்பூர் தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ