தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூர் தொகுதியில் நடைபெறும் அவரது முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வு இது என்பதால் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ-சேவை மையம்:
புதிய அலுவலக வளாகத்திலேயே பொதுமக்கள் வசதிக்காக அதிநவீன ‘இ-சேவை மையம்’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அரசின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில், எந்தவித அலைச்சலுமின்றி எளிதாகப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை:
அலுவலகத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டிருந்த கொள்கைத் தலைவர்களின் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் பல்வேறு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, தமக்காக ஒதுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் இருக்கையில் அமர்ந்து, அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கையாளும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு:
முன்னதாக விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, அமைச்சர் செங்கோட்டையன் மலர்கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும், இ-சேவை மையமும் பெரம்பூர் தொகுதி மக்களுக்குத் தேவையான அரசு சேவைகளை விரைவாகவும், எளிய முறையிலும் கொண்டு சேர்க்கும் முக்கிய காரணியாக விளங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
