இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியுடன் ஆலோசனை நடத்த உள்ள குழுவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும்? என்பன உள்ளிட்டவை குறித்தும் முழுமையான ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த நிலையில், நேற்று பாண்டிச்சேரியில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியாகும் என தெரிகிறது. வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ள தலைமை தேர்தல் ஆணைய குழுவினர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகின்றனர்.

முதல் கட்டமாக தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அடுத்ததாக, வருமான வரி, சுங்கத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப் பட்ட தேசிய, மாநில கட்சிகளுடைய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி விட்டு, 27-ம் தேதி மாலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் கடந்த வாரத்தில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து திரும்பினர். தற்போது சென்னை வந்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் தங்களது ஆய்வை முடித்த பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். இதன்படி இன்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி மற்றும் மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகள் உடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதியம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை தலைவர்கள் காவல்துறை ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.


