நீட் (NEET) தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் சென்னையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி, அவரை அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக் களத்தில் நடிகை வருகை
டெல்லி முதல் தமிழகம் வரை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பதற்காக நடிகை சனம் ஷெட்டி வருகை தந்தார்.

பேச்சுக்கு எதிர்ப்பு: திடீரெனப் பிடுங்கப்பட்ட மைக்
மேடையில் பேசத் தொடங்கிய சனம் ஷெட்டி, தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்றும், அவரது அண்மையிலான படம் குறித்தும் பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “இது மாணவர்களுக்கான போராட்டம்; இந்த மேடையைத் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக சிலர் பயன்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு அங்கிருந்த போராட்டக்காரர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பேச்சைப் பாதியிலேயே நிறுத்துமாறு வற்புறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. எல்.இ.டி மேடையில் பரபரப்பு அதிகரித்த நிலையில், சனம் ஷெட்டியிடம் இருந்த மைக்கைப் பிடுங்கி அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர்.

“இது போலியான போராட்டம்!” – சனம் ஷெட்டி ஆவேசம்
போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சனம் ஷெட்டி தனது கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார், “நான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கைப் பிடுங்கிவிட்டு என்னை வெளியேறச் சொன்னார்கள். இதுதான் ஜனநாயகமா? நான் ஒரு படம் பார்த்தால் ஜோக்கரா? என்னை விரட்டியடித்து விட்டார்கள். இது மாணவர்களுக்காக நடக்கும் உண்மையான போராட்டம் போலத் தெரியவில்லை; இது ஒரு போலியான போராட்டம்!” என்றும், “இந்த மேடையை யாராவது அவர்களின் சுயநல அரசியல் அஜெண்டாவுக்காகப் பயன்படுத்தினால் நான் அனுமதிக்க மாட்டேன். பேசுவதற்குச் சுதந்திரம் மறுக்கப்படும் இடத்தில் இது எப்படி ஜனநாயகப் போராட்டமாகும்?” என நடிகை சனம் ஷெட்டி ஆவசத்துடன் தெரிவித்தாா்.
மாணவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல நடிகை ஒருவர் மேடையிலேயே அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட இந்தச் சம்பவம், தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
