கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உச்சத்தில் இருந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் அதிரடியாகச் சரிவைக் கண்டுள்ளது. சவரனுக்கு ₹2,160 வரை குறைந்துள்ளதால், நகைப் பிரியர்களும், வரவிருக்கும் சுபமுகூர்த்த தினங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களும் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
இன்றைய சந்தை நிலவரம்
சென்னையில் இன்று விற்பனையாகும் தங்கம் மற்றும் வெள்ளி விலையின் அதிகாரப்பூர்வ விவரங்கள், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹2,160 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,05,840-க்கும், கிராமிற்கு ₹270 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ₹13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராம் ₹240-ஆகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிவைக் கண்டுள்ளது. கிராமுக்கு ₹5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ₹240-க்கு விற்பனையாகிறது.
திடீர் சரிவுக்குக் காரணம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வீழ்ச்சி குறித்து வர்த்தக அமைப்பினர் கூறுகையில், “சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் உண்டான ஏற்ற இறக்கங்கள் மற்றும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் திரும்பியது போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன் தாக்கமே உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது,” என்று தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த நிலையில், ஒரே நாளில் சவரனுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது சந்தை வல்லுநர்களிடையே ஆச்சரியத்தையும், சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
