தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், தலைநகரில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தங்குதடையின்றித் தொடர்ந்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முதல்வர் தொகுதியில் துணிச்சல் கடத்தல்!
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் சொந்தச் சட்டமன்றத் தொகுதியான பெரம்பூர் பகுதியில், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாகக் கடத்தப்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் இருந்து பெறப்படும் அரிசி மூட்டைகளைச் சில மர்ம நபர்கள் முதலில் இருசக்கர வாகனங்களில் ஏற்றி வந்து, பின்னர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தயார் நிலையில் இருக்கும் டாடா ஏஸ் (Tata Ace) சரக்கு வாகனத்தில் ஏற்றி வெளிச்சந்தைக்குக் கடத்திச் செல்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நேரடி ஆய்வுக்கு மத்தியிலும் தொடரும் முறைகேடு
அண்மையில்தான், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் விநியோக முறைகளை நேரில் பார்வையிடுவதற்காக, முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தரக்கட்டுப்பாடுகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களுக்குப் பொருட்களையும் வழங்கிப் பேசினார்.
“தூய ஆட்சி” என்ற முழக்கத்தோடு செயல்படும் முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே, அவரது ஆய்விற்குப் பிறகும் இத்தகைய அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்வது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் கடத்தல் கும்பலின் கூட்டு முயற்சியாலேயே இத்தகைய முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டும் பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டுத் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
