Homeசெய்திகள்சென்னை“ஒரு புகார் மீது கூட நடவடிக்கை இல்லை?” - முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி குறைதீர்...

“ஒரு புகார் மீது கூட நடவடிக்கை இல்லை?” – முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி குறைதீர் இணையதள விவகாரம்

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த வாரம் (ஜூலை 13) தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைக் கோலாகலமாகத் திறந்து வைத்தார். அதனுடன் சேர்த்து, தொகுதி மக்களின் குறைகளைக் களைவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பேனரில் “உங்கள் உரிமையைப் பதிவு செய்யுங்கள்” என்ற வாசகத்துடன் tvkcm.com/transparency என்ற மக்கள் சேவை குறைதீர் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

பெரம்பூர்

we-r-hiring

ஆனால், இந்த இணையதளம் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் பதிவான புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

792 புகார்கள் – தீர்வு விகிதம் பூஜ்ஜியம்:

இந்த இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இன்று (ஜூலை 20) பகல் 1 மணி நிலவரப்படி, பொதுமக்களால் மொத்தம் 792 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இணையதளப் பக்கத்திலேயே ‘தீர்வு காணப்பட்டவை – 0’, ‘செயல்பாட்டில் இருப்பவை – 0’, ‘தீர்வு விகிதம் – 0’ என்று நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு புகார்கள்?

பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ள குறைகளின் விவரங்கள் வருமாறு:

  • பொதுவான குறைபாடுகள் – 318

  • மின்சாரம் மற்றும் மின்வெட்டு சிக்கல்கள் – 163

  • சாலைக் குறைபாடுகள் – 150

  • நலம் மற்றும் சுகாதாரம் – 40

  • சாலைப் பாதுகாப்பு – 29

  • தெருவிளக்குகள் – 28

  • குப்பைகள் அகற்றுதல் – 25

  • மழை நீர் தேங்குவது – 20

வார்டு வாரியாகப் பதிவான புகார்கள்:

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் தங்களது புகார்களைப் பதிவு செய்துள்ளனர்:

  • வார்டு 34 – 342 புகார்கள்

  • வார்டு 35 – 106 புகார்கள்

  • வார்டு 36 – 84 புகார்கள்

  • வார்டு 45 – 73 புகார்கள்

  • வார்டு 37 – 69 புகார்கள்

  • வார்டு 44 – 61 புகார்கள்

  • வார்டு 46 – 57 புகார்கள்

தொழில்நுட்பக் கோளாறா? அல்லது அலட்சியமா?

இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி எந்தவொரு புகார் மீதும் இதுவரை தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. உண்மையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? அல்லது களத்தில் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதுகுறித்த விவரங்கள் இணையதளத்தில் இன்னும் முறையாகப் பதிவேற்றப்படவில்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

“முதலமைச்சர் விஜய்யின் சொந்தத் தொகுதியிலேயே மக்களின் புகார்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படாமல் தேங்கிக் கிடக்கிறதா? அப்படி என்றால் மற்ற தொகுதிகளின் நிலைமை என்னவாக இருக்கும்?” எனத் தொகுதி மக்கள் மத்தியில் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன.

MUST READ