சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வழக்குகள் உள்ள ‘ஏ’ பிரிவு ரவுடி
சென்னை திருமுடிவாக்கம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழழகு (26). இவர் காவல்துறை குற்றப் பதிவேட்டில் ‘ஏ’ பிரிவு (A-Category) சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 15-க்கும் மேற்பட்ட கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு, திருமுடிவாக்கம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், ரவுடி தமிழழகு மற்றும் அவரது நண்பரான ஆகாஷ் என்ற சூர்யா (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
காவனூர் மைதானத்தில் நள்ளிரவு துப்பாக்கிச் சூடு!
கைது செய்யப்பட்ட ரவுடிகள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்துள்ள பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். அதன்பேரில், நள்ளிரவில் குன்றத்தூரை அடுத்த காவனூர் மைதானம் பகுதிக்கு இருவரையும் தனிப்படையினர் அழைத்துச் சென்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுக்கும்போது, எதிர்பாராத விதமாக ரவுடி தமிழழகு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனிப்படை தலைமை காவலர் விஜயகுமாரின் வலது முழங்கையில் கொடூரமாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை
தலைமை காவலர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்டு, சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் முத்துக்குமார், தப்பியோட முயன்ற ரவுடியை எச்சரித்தார். எனினும் அவன் கட்டுப்படாமல் ஓடியதால், தனது தற்காப்பிற்காகவும், குற்றவாளியைப் பிடிப்பதற்காகவும் ஆய்வாளர் தனது துப்பாக்கியால் ரவுடியின் வலது கணுக்காலில் நோக்கிச் சுட்டார். தோட்டா பாய்ந்ததில் ரவுடி தமிழழகு அலறியபடி கீழே விழுந்தான்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி தமிழழகனை மீட்ட காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவசரச் சிகிச்சை பிரிவில் (ICU) உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ரவுடி வெட்டியதில் காயமடைந்த தலைமை காவலர் விஜயகுமார் மருத்துவமனையில் வெளிநோயாளியாகச் சிகிச்சை பெற்று, தையல் போடப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு – அதிர்ச்சிப் பின்னணி
கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு ரவுடியான சூர்யா, பிரபல ரவுடி ஓட்டேரி சிலம்புவின் மச்சான் (மைத்துனர்) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட இந்த இரு ரவுடிகளும் தங்களின் எதிரிகளைப் பழிவாங்க ரகசிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், பிடிபட்ட சூர்யாவிடம் இந்த கும்பலின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த என்கவுண்டர் சம்பவம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
